தமிழ்நாடு வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவின் புதிய உறுப்பினர்களாகச் சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக கடந்த 1971 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியால், மாநில திட்டக் குழுவானது புதிதாக உருவாக்கப்பட்டது. 

இந்த குழுவானது முதலமைச்சர் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்படும். இந்த குழுதான், மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் பரிந்துரைகளைத் தமிழக அரசுக்கு அளிக்கும். 

இந்த குழுவானது, கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

தற்போது, இதனை மாநில வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவாகத் திருத்தி அமைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்த மாநில வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவில் தற்போது புதிய உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.

அதன் படி, பேராசிரியர் ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். பேராசிரியர் ராம. சீனுவாசன் முழு நேர உறுப்பினராகச் செயல்படுவார் என்று, தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, இந்த குழுவில் சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன்

அதன் படி, மாநில வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், இதற்கு முன்பு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர் ஆவர். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாடு பொருளாதார மாற்றங்கள் குறித்துப் பல ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டு உள்ளார். பல்வேறு புதிய ஆய்வு நிறுவனங்களுக்காகவும், சர்வதேச வனங்களுக்காகவும் ஆய்வுகள் மேற்கொண்டவராக திகழ்கிறார்.

டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ.

ஏடி.ஆர்.பி. ராஜா, இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே அரசியல்வாதி. மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணியாற்றி வரும் இவர், ஆலோசனை உளவியல் மற்றும் மேலாண்மைப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். இவருக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினராகவும், மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும், பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் அங்கம் வகித்த அனுபவம் இருக்கிறது.

சித்த மருத்துவர் கு. சிவராமன்

சித்த மருத்துவத்தில் பட்டமும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவராக, பொது மக்களால் பெரிதும் அறியப்பட்ட நபராக இருக்கிறார். எப்போதும், மனிதர்களின் வாழ்வியல் முறைகள் பற்றியும், இயற்கை சார்ந்த விசயங்கள் பற்றியும் பேசி, தமிழக மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் தர நிர்ணயம் செய்து, அதன் பயனை உலகெங்கும் பரவலாக்கியதிலும், உலகெங்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ் மருத்துவ முறையாக நகர்த்தியமைக்கும் பெரும் பணியினை செய்து வருபவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதானியங்களின் ஊட்டம் குறித்த பயன்பாட்டை பேசி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ்

பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ், தனது நளினமான நடனத்தினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டவர். உலக அளவில் எண்ணற்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றவர். இந்தியாவின் மிக உயரிய விருதான “பத்மஸ்ரீ" விருதைப் பெற்ற முதல் திருநங்கை நடனக் கலைஞராகவும் புகழ் பெற்றுத் திகழ்கிறார்.

மிகப்பழமையான தஞ்சாவூர் நடன முறைகளை முதன்மையாகக் கொண்டு இவர் வழங்கி வரும் நடனம், வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளன. தமிழக மக்களால் பெரிதும் அறியப்பட்ட நர்த்தகி நடராஜ், இந்த குழுவின் முக்கிய உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பேராசிரியர் ம. விஜயபாஸ்கர்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்

இவர், சென்னையில் உள்ள லாபநோக்கற்ற அமைப்பான சுற்றுச்சூழல் அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநர் மற்றும் ஆலோசகராக இருந்தவர்.  மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக்குவதிலும் இவரது பங்களிப்பு மிகப் பெரியது.

மல்லிகா ஸ்ரீனிவாசன்

இவர், டிராக்டர் அண்டு ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE Limited) என்ற வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

தீனபந்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி

இவர், தமிழ்நாடு அரசில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வாரியம், கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் பெற்றவர்.

மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன்

இவர், சென்னை மருத்துவ கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை துறை பேராசிரியர், இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றவராகத் திகழ்கிறார்.

பேராசிரியர் இராம. சீனுவாசன்

இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக இருக்கிறார். பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகளாகக் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழக அரசின் “தமிழ்நாடு வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்” தமிழக மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் சற்று முன்பு சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், பகுதி நேர உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும், இந்த சந்திப்பின் போது இருந்தனர்.