தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து, கொரோனா பாதிப்பு சற்று குறைந்த மற்ற 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல், இன்று காலை காலை 6 மணி வரை அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது வரும் 14 ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடநத 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். 

இதன் காரணமாக, இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது தமிழகத்தில் அமலுக்கு வந்து உள்ளது. 

இந்த ஊரடங்கில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால், குறிப்பிட்ட சில அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

அத்துடன், மீதம் உள்ள தமிழகத்தின் மற்ற 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டது தற்போது அமலாகி உள்ளது.

அதன் படி,

- தனியாகச் செயல்படுகின்ற காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் திறக்கப்பட்டு, மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. 

- காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் திறக்கப்பட்டு, மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. 

- மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், அந்த கடைகளில் திறக்கப்பட்டன.

- அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களும் தற்போது பணிக்குத் திரும்பி உள்ளனர்.

- சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு மற்றும் அலுவலக பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றன.

- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் தற்போது பணிக்குத் திரும்பி உள்ளனர்.

- மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன.

- மின் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

- இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

- ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

- புத்தக கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

- வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

- டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகளால், சென்னை கோயம்பேடு சந்தை பழைய நிலைக்குத் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ள நிலையில், மின்சார ரயில் சேவை அதிகரிப்பு; தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை 88 முறை இயக்கப்படுகிறது. செங்கல்பட்டு - கடற்கரை வரை 34 தடவை இயக்கப்படுகிறது.

இவற்றுடன், 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.