தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் ஆன நிலையில், முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முதல் 30 நாட்களின் செயல்பாடுகள்
எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். 

தமிழ்நாட்டின் 23 வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டது இன்றுடன் 30 நாட்கள் நிறைவு பெறுகிறது. 

அப்போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..” என்று கூறி, பதவியேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் உடன், அவரது தலைமையில் 33 பேர் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்களும் கடந்த மாதம் 7 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

திட்டங்கள்

தமிழக முதலமைச்சராக கடந்த மாதம் 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும், முதன் முதலாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதன் படி, 

- ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில், முதல்
தவணையாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், 

- ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கும் கோப்பில் அவர் கையெழுத்திட்டார். 

- அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை முதல் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிற கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.

- தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தைத் தமிழக அரசே ஏற்கும் திட்டத்தில் அவர் கையெழுத்திட்டார். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும், அவர் அறிவித்தார்.

- பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தைச் செயல்படுத்த புதிய
துறை உருவாக்கம் செய்யும் திட்டம் என்று மொத்தம் 5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தன்னுடைய முதல் கையெழுத்திட்டார்.

- ஆக சிறந்த எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்.

- ஆண்டுதோறும் 3 எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது.

- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா சிறப்பு மையங்கள் மற்றும் தடுப்பூச முகாம்கள்.

- போக்குவரத்து ஊழியர்களுக்கு 492 கோடி ரூபாய் ஓய்வுதிய பலன்கள்.

- மரக்கன்றுகள் நடும் திட்டம்.

- அர்ச்சகர்களுக்கு 4 ஆயிரம ரூபாய் மற்றும் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டம்.


மு.க.ஸ்டாலின் கவனிக்க வைத்த 3 முக்கிய விசயங்கள்

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மு.க.ஸ்டாலின் இந்த செயல்பாடு ஒட்டு மொத்த தமிழர்களையும், சமூக ஆர்வலர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் புருவம் உயர்த்தி மிகவும் ஆச்சரியமாகப் பார்க்க வைத்தது.

- மிக முக்கியமாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி, எழுத்தாளர், படைப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்று, பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையாக வலம் வரும் இறையன்பு ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இது, தமிழக அரசுக்கும், தமிழக மக்களும் கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடும், தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே ஒரு புதுவித நம்பிக்கையை ஊட்டியது. 

- மாநில வளர்ச்சி மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தது அனைவரையும் அதிகம் கவனிக்க வைத்து உள்ளது. இந்த குழுவில், பெரும்பாலும் இயற்கை ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள். குறிப்பாக, சித்த மருத்துவர் கு. சிவராமன், பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோரை நியமித்தது, பொதுமக்களிடம் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆய்வுகள்

- சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 20 ஆம் தேதி ஆய்வு செய்தார்.

- செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி வளாகத்தில் மே 25ஆம் தேதி ஆய்வு செய்தார்.

- மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 21ஆம் தேதி ஆய்வு செய்தார்.

- குறிப்பாக, பிபிஇ கிட் அணிந்து கரோனா நோயாளிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்த நிகழ்வு.

கடிதங்கள்

- 7 பேர் விடுதலை தொடர்பாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்.

- செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு கடிதம்

- நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம்

அவசர ஆலோசனைகள்

- கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்தவ நிபுணர்களுடன் ஆலோசனை

- முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்க ஆலோசனை

- பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிப்பது குறித்து ஆலோசனை

மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த செயல்பாடுகள்

இப்படியாக, தமிழகத்தில் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதிவி ஏற்ற இந்த முதல் 30 நாட்களில் அவரது செயல்பாடுகள் என்பது..

- ஒரு அமைச்சரவை கூட்டம்

- 3 முறை எதிர்கட்சிகள் உடனான சந்திப்பு

- 5 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணங்கள்

- 6 முறை முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி மத்திய அரசுக்கு கடிதங்கள்

- 8 முறை ஆலோசனை கூட்டங்கள் 

- 23 முக்கிய அறிவிப்புகள்

- 29 திட்டங்கள் இந்த 30 நாட்களுக்குள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதுவே, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் 30 நாட்களில் செய்த சாதனையாகவும், ஆட்சியின் செயல்பாடாகவும் பார்க்கப்படுகிறது.