மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து ரஜினி முருகன் பைரவா  ,ரெமோ என தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் ,மலையாளம், தெலுங்கு என அனைத்து  தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி  கதாநாயகியாக வளர்ந்தார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  இந்திய அளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து தளபதி விஜய்யின் சர்க்கார், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி 2 என முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக அவர் நடித்து வெளிவந்த  மிஸ் இந்தியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இவரது அடுத்த திரைப்படமாக குட் லக் சகி உருவாகியுள்ளது.பிரபல இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர்  இயக்கும் குட் லக் சகி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிகர் ஆதி மற்றும் நடிகர் ஜெகபதிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவின் ராக் ஸ்டார் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இந்தியாவின் புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதீர் சந்திரா தயாரிக்கும் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் அதன் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இதனிடையே இத்திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் எந்த தளத்தில் வெளியாகும் என எதுவும் இன்னும் முடிவு செய்யபடவில்லை, முடிவானதும் அறிவிப்புகள் வரும் என தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக குட் லக் சகி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படத்திற்கு அதிக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள்.அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாதுரை படத்திலும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.