சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துடன், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசியது, அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது கட்சியில் அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன.

சசிகலா அரசியல் வருகை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரிவு, கூவத்தூர் காட்சிகள், சசிகலா கைது, டிடிவி புதிய அரசியல் கட்சி தொடங்கியது என்று, அடுத்தடுத்து மிகப் பெரிய குழப்பங்கள் நடந்து முடிந்திருக்கிறது அதிமுகவில். 

அதன் பிறகு, சசிகலா சிறையில் இருந்த கால கட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஒற்றுமையாகத் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, “அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர்?” என்பதில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒரு அரசியல் யுத்தமே நடந்து முடிந்தது. இறுதியில், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே இந்த முறையும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த போதிலும், “தமிழக எதிர்க்கட்சித் தலைவர் யார்?” என்பதில், மீண்டும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒரு அரசியல் யுத்தம் நடந்தது. இதிலும், எடப்பாடி பழனிசாமியே தேர்வு செய்யப்பட்டார்.

இப்படி, தமிழக எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.

இப்படியான நிலையில் தான், சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வருவது தொடர்பாக ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தன. இதனால், அதிமுக வட்டாரத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நேற்று முதன் முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இது, அதிமுக வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான மோதல், உச்சக் கட்டத்திற்கு வந்திருக்கிறதாகவும், தமிழக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஒ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை” என்று, பேசினார். 

“அவர், அவருடைய இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதால் வர இயலவில்லை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

அத்துடன், “இன்று நல்ல நாள் என்பதால், நான் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது, “சசிகலா ஆடியோ வெளியாவது” குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை என்றும், சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோ தான் வெளியானது” என்றும், அவர் விளக்கம் அளித்தார். 

மேலும், “அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை என்றும், குழப்பம் விளைவிக்கும் சசிகலாவின் முயற்சி வெற்றி பெறாது” என்றும், எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இப்படியான சூழ்நிலையில் தான், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். 

அரசு பங்களாவைக் காலி செய்த ஓ.பன்னீர்செல்வம், தற்காலிகமாகச் சென்னை தி.நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வசித்து வருகிறார். 

தற்போது, அரசு பங்களாவிலிருந்து பொருட்கள் அந்த இல்லத்திற்கு மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருவதால், அவர் தற்போது தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்தித்துப் பேசி உள்ளார்.

“இந்த சந்திப்பானது, தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதைக் காட்டுவதற்காகத் தான் நடைபெற்றதாகவும்” கூறப்படுகிறது.

“எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் வரை நடைபெற்ற நிலையில் நிறைவு பெற்றது” என்றும், கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்புக்கான காரணங்கள் குறித்து, இன்னும் முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.