கடலூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அவமானம் அடைந்த அந்த பெண், “ஆவியாக வந்து சத்தியமா பழிவாங்குவேன்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் வேல் முருகன் என்பவருக்கும், அங்குள்ள மணவாளநல்லூரை சேர்ந்த 30 வயதான செம்பாயி என்பவருக்கும், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

கணவன் வேல் முருகன், அங்குள்ள ராஜேந்திரபட்டிணத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியாக அந்த தம்பதியினர் வாழ்ந்து வந்தாலும், அந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாள்தோறும் பிரச்சனைகள் எழுந்துள்ளன.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவி செம்பாயி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை விட்டுப் பிரிந்து உள்ளார். அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக மணவாளநல்லூரில் உள்ள தனது பெற்றோருடன் அவர் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி 42 வயதான சின்னகுட்டி என்கிற ராஜேந்திரன், அந்த பெண்ணிடம் அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆனால், இதனைப் பிடிக்காத அந்த பெண் அந்த நபரிடமிருந்து விடுபடவே நினைத்து உள்ளார். இது பற்றி வெளியே சொன்னால், தனக்குத் தான் அவமானம் என்று நினைத்திருந்த அந்த பெண், தனக்குச் சேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 10 ஆம் தேதி வீட்டில் இருந்த அந்த பெண்ணை, வீடு புகுந்து வலுக்கட்டாயமாக அங்குள்ள தீவனத்தோட்டத்துக்கு தூக்கிச் சென்ற சின்னகுட்டி என்கிற ராஜேந்திரன், அங்கு வைத்து பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனாலும், அந்த பெண் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த சின்னகுட்டி என்கிற ராஜேந்திரன், அதற்குள் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, அந்த பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்ததும், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, அந்த பெண் தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று முடிவு எடுத்து இருந்தனர்.

ஆனாலும், தனக்கு சேர்ந்த பாலியல் பலாத்காரத்தால் கடும் அவமானம் அடைந்த அந்த பெண், கடந்த 11 ஆம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், அதன் பிறகு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். 

அங்கு அந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவரது வீட்டில் ஒரு கடிதம் கிடைத்து உள்ளது. 

அந்த கடிதத்தில், “ராஜேந்திரன் என்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நான் இறந்த பின் ஆவியாக வந்து அவரது குடும்பத்தைச் சத்தியமாகப் பழிவாங்கப் போவதாகவும்” எழுதி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேந்திரனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.