சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், அதிமுக பொதுக் குழுவும் கூடுவதால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறச் செய்துள்ளது. 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். தற்போது, அவர்கள் விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை அவர் விடுதலை ஆக வில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து, வரும் 27 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட இருக்கிறார். 

ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது. இளவரசி 5 நாள் பரோலில் வந்ததைக் கழித்தால் பொங்கலுக்கு முன்பு விடுதலை ஆவதற்கான‌ வாய்ப்புகளும், சுதாகரன் சுமார் 4 மாதம் காலம் சிறையிலிருந்ததைக் கழித்தால் இந்த மாதத்திலும் விடுதலையாக வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், சுதாகரன் அபராத தொகை கட்ட தாமதமானதால், அவரது விடுதலை ஜனவரி மாத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. அதில், 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு அளித்து இருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சுதாகரன் எந்த நேரத்திலும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்றும், அவர் சசிகலாவிற்கு முன்பே விடுதலை ஆவார் என்றும் தகவல்கள் வெளியானது.

அதே நேரத்தில், தமிழகத்தின் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலும் வர இருக்கிறது. இதனால், அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டு, அது பிரச்சனையாகி, பிறகு சமரசம் ஏற்பட்டு முதலமைச்சர் பழனிசாமியே, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தற்போது அது தொடர்பான தேர்தல் வேலைகளை அக்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், “பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தாலும், அதிமுக வில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனால், அதிமுகவில் பெரிய சலசலப்பு ஏற்படும் என்றும், அதிமுகவில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்றும் அக்கட்சியினரே கூறி வருகின்றனர்.

சசிகலா தரப்பில் டிடிவி தினகரன் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வந்தாலும், “நான் அதிமுக தான்” என்று சசிகலாவும் கூறி வருவதால், சிறையிலிருந்து சென்னை வரும் வாகனத்திலேயே அதிமுகவின் கொடியுடன் தான் அவர் பயணிப்பார் என்றும், கூறப்படுகிறது. 

மிக முக்கியமாக, சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவிடம், “விடுதலைக்குப் பிறகு, தமிழக அரசியல் தொடர்புடைய விசயங்களில் தலையிடக் கூடாது என்றும், உடல் நலம் சார்ந்த விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” பாஜக தலையிலிடத்திலுந்து சசிகலாவிற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “அதிமுக - பாஜக கூட்டணிக்கு எனது ஆதரவு உண்டு” என்று, சசிகலாவை அறிக்கை வெளியிட வைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அத்துடன், முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இருந்தும் சசிகலாவிடம் பேசப்பட்டு வருவதாகவும், ஆனால், ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதுவரை யாரும் எதுவும் பேசாமல் இருப்பதாகவும், இதனால், அதிமுக பொதுக் குழுவில் எதுவும் நடக்கலாம் என்றும், அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.