பிளஸ் 1 மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் நடைபெறும் இப்படியான ஒரு கொடூர சம்பவம், இந்த முறை நம்ம தமிழ்நாட்டில் அதுவும் கோவை மாவட்டத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். 

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த மாணவி தன்னுடைய வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாக படித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அந்த மாணவியின் பெற்றோர் வேலை விசயமாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அந்த மாணவி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி உள்ளார். 

முதலில், தங்கள் மகள் தோழிகளின் வீட்டிற்கு சென்றிருப்பாள் என்று எண்ணிய அந்த மாணவியின் பெற்றோர், சிறுது நேரத்தில் அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு உள்ளனர். ஆனால், அந்த செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

அதே நேரத்தில், வெகு நேரமாகியும் அந்த மாணவி வீடு திரும்பாத நிலையில், சற்று பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அந்த மாணவி பற்றிய எந்த விபரமும் கிடைக்கா நிலையில், பயந்துபோன மாணவியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மாயமான பிளஸ் 1 படிக்கும் மாணவி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, போலீசார் அங்கு விரைந்துச் சென்று மாணவியை பத்திரமாக மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக மீட்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். இந்த விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் சிதம்பரத்தைச் சேர்ந்த 29 வயதான ஏழுமலை என்ற இளைஞர், மாணவிக்கு ஆசை வார்த்தைக் கூறி, காதல் வலையில் வீழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவியிடம் தொடர்ந்து ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி பேசி வந்த இளைஞர் ஏழுமலை, அங்குள்ள செல்வபுரத்தைச் சேர்ந்த கால்டாக்ஸி டிரைவரான 30 வயதான சண்முகத்தின் உதவி உடன், அந்த மாணவியை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

குறிப்பாக, அந்த மாணவியை கடத்திய அந்த இருவரும், அந்த மாணவியிடம் மயக்கும் வார்த்தைகளைப் பேசி ஊட்டி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, செல்வபுரம் காவல் துறையினர் மாணவியை கடத்திய 2 ளைஞர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தேடி கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகு, அவர்கள் இருவரும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு, அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவுப் படி, அவர்களைக் கோவை மத்தியச் சிறையில் போலீசார் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.