ராசிபுரம் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், மேலும் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்து உள்ள அணைப்பாளையம் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 13 வயது சிறுமி, மற்றும் 15 வயது சிறுமிகளான சகோதரிகள் இருவருக்கும், தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் உட்பட 12 பேரை ராசிபுரம் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த 12 பேரும், அந்த இரு சிறுமிகளிடமும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர், கடந்த சில நாள்களுக்கு முன்பு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 45 வயதான சண்முகம், 26 வயதான சிவா ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், அதிரடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, இன்று இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மேலும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இது வரை மொத்தம் 6 பேரை போலீசார், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

அது போல், சென்னை கோயம்பேட்டில் 3 மாத குழந்தையைக் கடத்தி 10 லட்சம் ரூபாய் பணத்துக்காக விற்க முயன்ற 6 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், கூலித் தொழில் செய்து வருகிறார். ரமேஷ் தனது மனைவி சத்யா, மற்றும் தனது 3 மாத குழந்தை சஞ்சனா உடன் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் தங்கிப் பணியாற்றி வந்தார். 

அப்போது, கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல்போனது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் - சத்யா தம்பதி, இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அன்று இரவு 9 மணி அளவில் குழந்தை அம்பத்தூர் அருகே கண்டுபிடித்து மீட்டனர்.

மேலும், குழந்தை கடத்தப்பட்டது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதாலும், கடத்தல் கும்பல் பயந்துள்ளனர். இதனால், காவல் துறையிடமிருந்து தப்பிப்பதற்காக அம்பத்தூர் பகுதியில் குழந்தையை விட்டுவிட்டு அவர்களே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குழந்தை ஒன்று அனாதையாகக் கிடப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டனர்.

இது தொடர்பான வழக்கில் போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணையில், குழந்தையைக் கடத்தியதாக 2 சிறார்கள் உள்பட 6 பேரை போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர்.