தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி அழைப்பு விடுத்து உள்ளார்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. இதன் மூலமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிறார். 

முன்னதாக நேற்றைய தினம் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 125 திமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அத்துடன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் பங்கேற்றனர். அந்த வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர்.

இப்படியான நிலையில், சட்டமன்ற திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்து கையெழுத்திட்ட கடிதத்தை 

எடுத்துக்கொண்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலையில் சந்தித்தார். அப்போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரினார். அத்துடன் புதிய அமைச்சர் பட்டியலையும் ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்.

அதன் படி, வருகிற 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.  கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே மிகவும் எளிமையான முறையில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி அழைப்பு விடுத்து உள்ளார்.

அதன் படி, நாளை மறுநாள் காலை 9 மணி அளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அவருடன், தமிழக அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

இந்த பதவி ஏற்பு விழாவிற்கு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.