மளிகை, தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரையே மட்டுமே இயங்கும் வகையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றன.

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பானது, நேற்றைய தினம் புதிதாக 23 ஆயிரத்து 310 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதே போல, தமிழ்நாட்டில் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்து உள்ளது.

அதன் படி,

- அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.

- பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

- வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 

- அதே போபல், தனியாகச் செயல்படுகின்ற மளிகைக் கடைகள், பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- இந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- மளிகை கடை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

- மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- அத்துடன், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

- டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

- உணவகங்கள், டீ கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட உள்ளது. 

- உணவு விடுதிகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மெஸ் ஆகிய இடங்களில் இருந்து உணவு பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- அதுவும், காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதிரடியாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. 

-  தனியார் விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

- உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் 
தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 பேர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட உள்ளது.

- ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

- அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் கொரோனாவை கட்டுப்படுத்த கடைகளுக்கு நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. 

அத்துடன், நேற்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கடை வீதிகளில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. இதனால், சாலைகளில் மக்கள் அதிக அளவில் வாகனங்களில் சென்று வருவதையும், சாலைகளில் நடந்து செல்வதையும் காலை முதல் காண முடிகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மக்கள் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடியதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடுமோ என்கிற பீதியும் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.