பெண் வேட்பாளரான தனக்கு ஆபாசப் படம் அனுப்பிய நபரை போலீசார் இதுவரை கண்டுப்பிடிக்காததை கண்டித்து, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் நிறுவனரான வீரலட்சுமி, திடீரென்று செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை என்கிற அமைப்பின் நிறுவனராக இருந்து வருகிறார். இவர், சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் “மை இந்தியா பார்ட்டி” சார்பில், தேர்தலில் இந்த முறை போட்டியிடுகிறார். கடந்த முறை தேர்தலிலும், இவர் தேர்தலில் வேட்பாளராகக் களம் கண்டார்.

 இந்த நிலையில், வீரலட்சுமி சென்னை பம்மலில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். 

இப்படியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர், வீரலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக தெரிகிறது. இதனைப் பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்த பெண் வேட்பாளர் கி.வீரலட்சுமி, இது குறித்து அங்குள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று “எனக்கு செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பிய நபரை இன்னும் 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும், அப்படி கைது செய்யவில்லை என்றால், நானே சம்மந்தப்பட்ட அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து, அவரின் பிறப்புறுப்பை அறுத்து, அதனை சமூக வலைதலைத்தில் வீடியோவாக வெளியிடுவேன்” என்று, ஆவேசமாகப் பேசி வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தார். 

போலீசாரை எச்சரிக்கும் தோணியில் இருக்கும் அந்த வீடியோவானது, போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இதனால், தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் நிறுவனருமான கி.வீரலட்சுமி பேசி உள்ள இந்த வீடியோ தொடர்பாக அடுத்து என்ன செய்ய வேண்டாம் என்று போலீசார் தரப்பில் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை சம்மந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்யாமல் இருந்து வந்தனர்.

இதனால், கடும் கோபம் அரைடந்த பல்லாவரம் தொகுதியின் பெண் வேட்பாளரான கி.வீரலட்சுமி, தனக்கு ஆபாசப் படம் அனுப்பிய நபரை போலீசார் இதுவரை கண்டுப்பிடிக்காததை கண்டித்து, திடீரென்று செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை விமான நிலையம் அருகே உள்ள 100 அடி உயரம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று, “ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபரை கைது செய்யும் வரை நான் கீழே இறங்க மாட்டேன்” என்று, அவர் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், அவரிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கீழே இறங்காமல் தொடர்ந்து அடம் பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.