மனைவி குஷ்புக்காக கணவர் சுந்தர் சி, வீடு வீடாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை ஆயிரம் விளக்கில் நட்சத்திர வேட்பாளராக நடிகை குஷ்பு ஜொலிக்க தொடங்கி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான குஷ்பு, தற்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இதன் காரணமாக நடிகை குஷ்பு, தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் படி, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு, அப்பகுதியில் சிறுவர் - சிறுமிகள் முதல், பெரியவர்கள் வரை பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். 

முக்கியமாக, ஒவ்வொரு வீட்டு வாசலில் வந்து வாக்கு சேகரிக்கும் குஷ்புவை, தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து பல பெண்களும் ஆராத்தி எடுத்து, உற்சாக  வரவேற்று அளித்து வருகின்றனர்.

அப்போது, வீட்டு பெண்களும், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமிகள் உட்பட பல தொகுதிவாசிகள், குஷ்புவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதன் காரணமாக, பாஜகவின் முக்கிய நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்புவிற்கு, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தற்போது ஆதரவு அலை சற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிகம் வசிக்கும் அடித்தட்டு மற்றும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்விக்கு உத்தரவாதம், சுகாதாரம், சுத்தமான குடிநீர், சிறுபான்மையின மக்களுக்கு மோடி அரசு செய்து கொடுத்துள்ள அரசின் திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி, அவர் பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். 

அத்துடன், ஆயிரம் விளக்கு தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், வேன் புக முடியாத சின்னச் சின்ன தெருக்களில் கூட, நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் நடிகை குஷ்புவிடம், வாக்காளர்கள் பலரும் தங்களுடைய குறைகளையும், தங்களது தொகுதி சார்ந்த குறைகளையும் தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக, நடிகை குஷ்புவுடன், அவரது கணவரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சியும், உடன் வந்து, தனது மனைவிக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கணவன் - மனைவி இருவருமாகச் சேர்ந்து வாக்கு சேகரித்து வருவது, பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது.

மேலும், தேர்தலுக்கான கால அவகாசம் சில நாட்கள் மட்டுமே இன்னும் இருப்பதால், குஷ்பு தன்னுடைய பிரசார பயணத்தை தற்போது இன்னும் தீவிரப்படுத்தி உள்ளார் என்றும், ஆயிரம் விளக்கு தொகுதியில் எப்போது, எந்த நேரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்ற விபரங்களையும், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதன் படி “கிழக்கு, மேற்கு நமச்சிவாயபுரம், வட அகரம், திருவெங்கடபுரம், திருவள்ளுவர் புறம், நீலகண்டன் தெரு, கான் தெரு, பாஷா தெரு, சக்தி நகர், ராதாகிருஷ்ணன் நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, கிருஷ்ணாபுரம் எம்ஜிஆர் சிலை அருகில்” என்று, நாளை தினம் நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள தொத்திகளை அவர் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இதனிடையே, நடிகை குஷ்புவுடன், அவரது கணவர் சுந்தர் சியும் சேர்ந்து பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது, அப்பகுதி மக்களிடையே, 
பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.