இங்கிலாந்து நாட்டில் ஹனிமூனுக்கு பணம் சேர்க்க நினைத்த இளம் பெண் ஒருவர், போதைப் பொருட்களை கடத்தி விற்க முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். 

இங்கிலாந்தின் செஷையரில் மெர்சி ஆற்றின் கரையில் உள்ள ஒரு பெரிய நகரமான வாரிங்டன் (Warrington) பகுதியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

வாரிங்டன் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணான Terrie Renwick, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனைக் காதலித்து வந்தார்.

தங்களது காதலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல நினைத்த அந்த காதலர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இன்னும் சில தினங்களில் அந்த பெண் தன்னுடைய காதலனைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். திருமணத்திற்குப் பிறகு, தன் காதல் கணவனுடன் தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்த அந்த இளம் பெண், “அதற்கு நிறையப் பணம் தேவைப்படுமே” என்று யோசித்து உள்ளார். அதனால், தனது தேனிலவுக்குத் தேவையான பணத்தை எப்படியும் சம்பாதித்து விட வேண்டும் என்று, அந்த இளம் பெண் முடிவு செய்தார். அதன்படி, அந்த பெண் சட்டத்திற்குப் புறம்பான ஒரு சில செயல்களில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் செயல்பாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பெண்ணிற்கே தெரியாமல் போலீசார் அவரை பின் தொடர்ந்து செல்வதும், அவரை கவனித்துக்கொண்டுமாக இருந்து உள்ளனர்.  

அப்போது, அந்த பெண்ணின் மீது சந்தேகம் இன்னும் முற்றிய நிலையில், சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணின் வீட்டில் போலீசார், திடீரென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த நேரம் பார்த்து, அந்த பெண் அங்குள்ள கழிவறைக்குள் தனது கையை உள்ளே விட்டு எதையோ தேடிக்கொண்டு இருந்துள்ளார். சோதனைக்கு வந்த போலீசார் இதனைப் பார்த்து உள்ளனர்.

சோதனையில் ஈடுபட்ட போலீசாரில் ஒருவர் அந்நாட்டின் காவல் துறையில் பிளம்பராக பணியாற்றியவர் என்பதால், அந்த குறிப்பிட்ட கழிப்பறையில் இருந்து வெளிவரக்கூடிய குழாயை அவர் பரிசோதித்துப் பார்த்து உள்ளார். 

அப்போது, அந்த கழிப்பறையின் குழாய்க்குள் சுமார் 220 ஹெராயின் மற்றும் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாகப் போதைப் பொருட்களைக் கடத்திய வைத்திருந்த குற்றத்திற்காக, அந்த இளம் பெண்ணை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பெண்ணிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றனர். அப்போது தான், “அந்த பெண்ணிற்கு இன்னும் சில தினங்களில் தன் காதலனைத் திருமணம் செய்துகொண்டு தேனிலவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும், அப்படி தேனிலவுக்கு செல்லும் போது காதலனைச் செலவு செய்ய விடாமல், தானே செலவு செய்வதற்காக, இது போன்ற சட்ட விரோத நடவடிக்கையில்” அந்த பெண் இறங்கியதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

விசாரணைக்குப் பிறகு, அந்த பெண்ணை அந்நாட்டின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, போதைப் பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக, அந்த இளம் பெண்ணிற்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, அந்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அந்த இளம் பெண்ணின் தேனிலவு கனவு, கரைந்துபோனது குறிப்பிடத்தக்கது.