ஆன்லைனில் மூலம் காதலித்து வந்த இளைஞன், காதலியின் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் இருக்கும்  புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அம்ரின் என்ற பெண், வசித்து வருகிறார். அமிரின்கு அஜீஸ் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. 

இந்த நிலையில், சமூக வலைத்தளமான yoyo பக்கத்தில் திருமணம் ஆன அம்ரின் அதிகம் மூழ்கிப் போய் இருந்து உள்ளார். அப்போது, குறிப்பிட்ட இந்த சமூக வலைத்தளம் மூலமாக சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான பூபதி என்ற இளைஞர் பழக்கமாகி உள்ளார். பூபதி, அங்குள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். ஆனால், இவருக்குத் திருமணம் ஆகாத நிலையில், அம்ரினுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

அத்துடன், திருமணம் ஆன இளம் பெண் அம்ரின், காதலன் பூபதியிடம் “நான் கல்லூரி மாணவி என்றும், தனக்குத் திருமணம் ஆனதையே முற்றிலுமாக மறைத்துவிட்டுக் கடந்த 8 மாதமாக yoyo செயலி மூலம் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி காதலன் பூபதி, தனது ஊரான சேலத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி விட்டு, சமூக வலைத்தள காதலியான அம்ரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

அப்போது தான், காதலி அம்ரினுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், கூடவே கணவர் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும், “அம்ரினின் கணவர் வியாபார விசயமாக வெளியூர் சென்றிருப்பதாகவும், அவர் வருவதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகும்” என்று கூறி, காதலன் பூபதியுடன் தனது வீட்டிலேயே 2 நாள்கள் தங்க, அவர்கள் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், அம்ரின் நேற்று மாலை, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி வருவதாகக் கூறி விட்டு, பூபதியை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி விட்டு வெளியே சென்று உள்ளார். 

அப்போது பூபதி, வீட்டில் உள்ள பேனில் புடவையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அம்ரின், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

மேலும், காதலனின் தற்கொலை குறித்து அந்த பெண், உடனடியாக அங்குள்ள புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பூபதியின் சடலத்தை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பூபதி கொண்டு வந்த மஞ்சள் தாலி மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்த தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.