தமிழக அரசியலில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்தான் தோழர் தா.பாண்டியன். தொழிலாளர் உரிமை போராளியாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் தா.பாண்டியன்.

மதுரை  மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியில் 1932ம் ஆண்டு பிறந்தார்.டேவிட், நவமணி தம்பதிக்கு 4வது மகனாக பிறந்த தா.பாண்டியன் அங்குள்ள  உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின்பு அழகப்பா கல்லூரியில் தன் மேற்படிப்பை முடித்தார்.கல்லூரி படிக்கும் போதே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் தா.பாண்டியன். அவரின் அரசியல் ஈடுபாட்டை பார்த்த அழகப்பா கல்லூரியின் நிறுவனர் அழகப்பா செட்டியார் மாமேதை காரல் மார்க்ஸின் புத்தகத்தை அவருக்கு வழங்கினார்.அந்தப் புத்தகத்தை படித்த பின்பு கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.அதன்பின்பு தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி  1983 முதல் 2000ஆம் ஆணடு வரை அதன் மாநில செயலாளராக பதவி வகித்தார். 
2000 ஆம் ஆண்டு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார் தா.பாண்டியன். 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்தார். வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி ஆக பதவி வகித்தார் தா.பாண்டியன். 

தா.பாண்டியன் அவர்களுக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா என்ற இரு மகள்களும் உள்ளனர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என்ற பன்முகத்தன்மைக் கொண்டவர் தான் தோழர் தா.பா. 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நாளிதழான ஜனசக்தியின் ஆசிரியராக இருந்தவர். அவர் எழுதிய மேடைப்பேச்சு, பொதுவுடைமையின் வருங்காலம் ஆகிய நூல்கள் மிகுந்த புகழ்பெற்றவை. சவுக்கடி என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்கு ஏராளமான வாசகர்கள் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தோழ்ர் ஜீவாவிற்கு பிறகு மிகப்பெரும் சிறந்த பேச்சாளராக தா.பாண்டியன் அறியப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  முதுபெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த தா.பாண்டியன் 88 வயதில் சென்னையில் உயிர் நீத்தார். முதுபெரும் தோழராக கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லோராலும் தா.பா என்று அன்போடு அழைக்கப்படும் அவரின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அது தான் அவரது இறுதி உரை என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டோம். அவரின்  கடைசி மேடைப் பேச்சும் கம்யூனிஸ்ட் மேடையிலேயே முடிந்திருக்கிறது. தனது கடைசி காலக்கட்டம் வரை அவரின் பேச்சு, எழுத்து, மூச்சு  என   அனைத்தும் பொதுவுடைமைக் கொள்கைகளை பரப்புவதிலும், சமூக சீர்திருத்தம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதுமாகவே இருந்துள்ளது. 
அரசியலில் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தா.பாண்டியன் அவர்களின் இழப்பு தமிழக மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவரின் பேச்சும், எழுத்தும் என்றுமே நம்மை விட்டு மறையாது என்பதையும், தா.பா என்ற பெயர் அரசியல் வட்டாரத்தில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் என்பதையும் நம்மால் மறுக்க முடியாது.