இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் விவசாயம் தொடர்பாக விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை நிறைவேற்றபட்டன.

இந்தச் சட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அ.தி.மு.க. உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மசோதாவை ஆதரித்துப் பேசினார். இந்த நிலையில் இது தொடர்பான மசோதாக்களை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியமும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினார். இந்த வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ஆம் தேதி திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் இடங்களின் விவரம் வருமாறு:-

காஞ்சிபுரம் தெற்கு - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேற்கு - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சென்னை வடக்கு - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கு - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை கிழக்கு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தஞ்சை - இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், திருச்சி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், கடலூர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தாம்பரம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கோவை - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து.

மேற்கண்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோர், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் ஆகியவற்றை கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களவையில் இந்த மசோதாக்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது தொடர்பாக, தி.மு.க. கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, இந்தச் சட்டங்கள் எப்படி விவசாயிகளுக்குச் சாதகமானவை என விரிவான அறிக்கை ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில், "இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை கிடைக்குமென்பதால்தான் விவசாயியாகிய தான் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்றும் இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலை வேறு; பஞ்சாபின் நிலை வேறு" என்றும் முதல்வர் தனது அறிக்கையில் விளக்கமளித்திருந்தார்.