முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், யாரும் நிம்மதியாக இல்லை. மின்கட்டணம், பால், பெட்ரோல், டீசல் விலை விஷம் போல ஏறியுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, தளி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ளும் போது பேசியுள்ளார். 


மேலும் அவர், ‘’ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் 3000 கோடி முதல் 5000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது. வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்ட் ஆகவும் ஊழல் செய்வார்கள். மக்களை ஏமாற்றி வெற்று விளம்பரம் பிரசாரம் செய்கிறது.

தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஊழல், பொய்கள், மாநில உரிமைகள் இழந்தது, விலைவாசி உயர்வு சேர்ந்தது தான் இந்த அதிமுக ஆட்சி. கொஞ்சம் கூட தயங்காமல் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள்.


சிஏஏ ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்துவிட்டு, தமிழகத்தில் சிஏஏ வராது என்று வெட்கம் இல்லாமல் பொய் பிரசாரம் செய்கிறார்கள். பாஜகவை எதிர்க்கத் திராணி இல்லாமல் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். “ என்று பேசினார்.