“தமிழகத்தில் நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காடையாம்பட்டி சாலையில் நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய முதலமைச்சர், “ 'வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற, வார்த்தையைக் கேட்டாலே, திமுக தலைவர் ஸ்டாலின் நடுங்குகிறார் என்று குறிப்பிட்டார். 

“அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதால், ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார் என்றும், முதலமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், பொது மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்த திமுக, யாருக்கும் அதனை கொடுக்கவில்லை என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

மேலும், “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சாதனை படைத்து வருவதாகவும், திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு இருந்த காலம் போய், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறி உள்ளது” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

குறிப்பாக, “சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும் போது, மொத்தமாக 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும்” முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, தருமபுரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மருத்துவப் படிப்பில் ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையை, அதிமுக அரசு மாற்றி உள்ளதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “ 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 435 ஏழை மாணவர்கள் பயன் அடைந்து உள்ளதாகவும், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்கும்” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.

முக்கியமாக, “தமிழக வரலாற்றில் 2 முறை பயிர்கடன் தள்ளுபடி செய்துள்ளோம் என்றும், ஏழை - எளிய மக்களுக்காகப் பாடுபடும் அதிமுக அரசு தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றும்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.