மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கடுமையாகத் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம், சக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா அலை மீண்டும் வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதி மூடப்பட்டிருந்த நிலையில், உணவிற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று, நிர்வாகம் அப்போது கூறியிருந்தது.

இதனை எதிர்த்து மாணவ - மாணவிகள், உணவிற்குக் கட்டணம் வாங்கக் கூடாது என்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது தோழி மற்றும் நண்பர்களிடம் இது குறித்து அவர் கூறியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

தொடர்ச்சியாகக் கல்லூரி பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் காரணமாக, சம்மந்தப்பட்ட 5 மாணவ, மாணவிகளைக் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

இந்த நிலையில், “மாணவர்களை இடைநீக்கம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டும், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய தினம் சக கல்லூரி மாணவ மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 20 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆதரவாக, மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவ மாணவிகளை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தின் போது, போலீசார் அத்துமீறி மாணவ, மாணவிகளைத் தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், சக மாணவர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ள நிலையில், சக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கல்லூரி நிர்வாகத்திற்கும் எதிராகவும், தாக்குதல் நடத்திய போலீசாருக்கு எதிராகவும் பலரும் தங்களது கண்டன குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.