வாக்காளர் வீட்டில் டீ வைத்து சப்ரைஸ் கொடுத்த நடிகை குஷ்பு, நூதன முறையில் வாக்கு சேகரித்த ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கி உள்ள குஷ்புவிற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அந்த பகுதியில் சற்று அதிகரித்து வருகிறது. பாஜகவின் முக்கிய நட்சத்திர வேட்பாளரான குஷ்பு, ஆயிரம் விளக்கு பகுதியில் தினந்தோறும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த தொகுதிக்கு குஷ்பு வாக்கு சேகரிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டாலே. ஆரத்தி தட்டுடன் வரவேற்பு கொடுக்க அப்பகுதி மக்கள் தயாராகி விடுகின்றனர். 

பிரபல நடிகை என்ற பெயர் ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது தேர்தல் களத்தில் துளியும் பந்தா இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அன்புடன் அணுகி, தொகுதியில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார் குஷ்பு. 

மேலும், “திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில்,  கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட வேண்டும்” என்ற தீவிரத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் நடிகை குஷ்பு.

அத்துடன், தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து குஷ்புவை வாழ்த்தி வரவேற்காத இல்லத்தரசிகளே ஆயிரம் விளக்கு தொகுதியில் இல்லை என்று சொல்லும்  அளவிற்கு, அவருக்கு பெண்களின் ஆதரவு தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிக வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய முழு ஆதரவையும் குஷ்புவிற்கு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய குடும்பங்கள் பலவும் குஷ்புவை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து ‘எங்க வீட்டுக்கு வாங்க’ என்று, உரிமையுடன் அழைப்பு விடுத்து உபசரித்து வருகின்றனர். அப்படி, இன்று அந்த தொகுதியில் உள்ள குலாம் அபாஸ் அலிகான் 7 வது தெருவில் வீடு, வீடாக சென்று குஷ்பு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். 

அப்போது, காதல் தம்பதியான முஸ்தபா - சலீன் ரீட்டா ஜோடி, நடிகை குஷ்புவை “எங்களுடைய வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திவிட்டுச் செல்லும் படி” அன்புடன் அழைத்திருக்கிறார். 

அந்த அன்பான கோரிக்கையை மறுக்க விரும்பாத நடிகை குஷ்புவும், அவர்களுடைய வீட்டிற்குள் நுழைத்தார். ஆனால், சேரில் அமர்ந்து கொண்டு ஏரியா மக்களுடன் வித விதமாக செல்ஃபி எடுத்து நேரத்தை போக்கிவிட்டு, பேருக்கு இரண்டு மடக்கு டீயை குடித்துவிட்டுச் செல்ல அவர் நுழையவில்லை என்பது சிறிது நேரத்தில் அங்க இருந்த அனைவருக்குமே தெரிந்தது. 

காரணம், சலீன் ரீட்டாவிடம் சமையலறை எங்கு இருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்ட குஷ்பு, சட்டென்று சமையல் அறைக்குள் நுழைந்தார். ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஹாலில் காத்திருக்க சொல்லிவிட்டு, சமையல் அறையில் விறுவிறுப்பாகத் தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார். 

பால், டீத்தூள், சர்க்கரை ஆகியவை ஏங்கியிருக்கிறது என்பதை அவரே தேடி எடுத்து, சிரித்த முகத்துடனும் குஷ்பு, டீ போட்ட அழகை அந்த ஏரியா மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

சில நிமிடங்களிலேயே மணக்க மணக்க டீ தயாரித்த குஷ்பு, அதனைக் கொண்டு வந்து அவர் கையாலேயே அனைவருக்கும் கொடுத்தார். மனம், சுவை, திடம் மட்டுமல்ல குஷ்புவின் அன்பும், அக்கறையும் கலந்திருந்ததால், தேநீர் டபுள் மடங்கு சுவையாக இருந்தாக அந்த வீட்டில் இருந்தவர்கள் குஷ்புவை பாராட்டினார்கள். 

“நான் உங்களில் ஒருத்தி” என்று சொல்லுவதை விட, வீட்டின் சமையலறை வரை சென்று நிரூபித்தே விட்ட குஷ்புவிற்கு, இப்போது ஆயிரம் விளக்கு தொகுதி பெண்களின் ஒட்டு மொத்த ஓட்டும் கன்பார்ம் ஆகியிருக்கிறது.