ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட 15 வயது சிறுமியை, ஓட்டல் அறையில் அடைத்து வைத்து 3 பேர் சேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தனது பெற்றோருடன் தங்கியிருந்த அந்த சிறுமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய் உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த பகுதியில் முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். எங்குத் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், மகள் மாயமானது தொடர்பாக அங்குள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாகத் தேடி வந்தனர். அத்துடன், சிறுமியின் வீட்டைச் சுற்றி இருக்கும் கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், மாயமானதாகக் கூறப்பட்ட சிறுமி, 2 நாட்களுக்குப் பிறகு நடக்க முடியாமல் நடந்து வந்து வீடு திரும்பி உள்ளார். சிறுமியை நிலையைப் பார்த்த சிறுமியின் பெற்றோர், கதறித் துடித்தனர். 

மேலும், “என்ன நடந்தது? எங்கே போனாய்?” என்று, சிறுமியின் பெற்றோர் விசாரித்த நிலையில், “என்னை 3 இளைஞர்கள் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, அருகில் உள்ள ஓட்டல் அறையில் என்னை அடைத்து வைத்து, பலவந்தமாக என்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்” என்று, கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, அவர்களும் கதறி அழுதனர். இதனையடுத்து, அங்குள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் இது தொடர்பாக மீண்டும் புகார் அளித்தனர். இந்த வழக்கு, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி லட்சுமி, தீவிரமாக விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 26 வயதான மணி, சென்னை குன்றத்தூர் சிக்கராயபுரத்தை சேர்ந்த 23 வயதான கார்த்தி, 23 வயதான செல்வராஜ் ஆகிய 3 பேரும் தான், சிறுமியை கடத்தி, பலவந்தமாக அடைத்து வைத்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அவர்களைப் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து உள்ளனர். இந்த விசாரணையில், “15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, ஓட்டலில் அறை எடுத்துத் தங்கி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததை” அவர்கள் 3 பேருமாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் பணிகளை மேற்கொண்டு 
வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.