தமிழகத்தில் தளர்வுகள் ஏதுமின்றி மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதனால், ஒரு வாரம் காலத்திற்கு மளிகை, காய்கறி கடைகள் செயல்படாது என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றின் பரவல் 2 வது அலையாகத் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாகத் தமிழகம் தற்போது தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனால், தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, “தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என, தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது.  

குறிப்பாக, “தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க” மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இந்த ஆலோசனைக்குப் பிறகு, அனைத்துக் கட்சிகள் அடங்கிய சட்டமன்ற கட்சி குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் ஏக மனதாக ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னதாக, மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனை முடிந்த பிறகு, அடுத்த சில நிமிடங்களிலேயே சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக” குறிப்பிட்டார். 

குறிப்பாக, “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதே தவிர, முழுமையான கட்டுக்குள் வரவில்லை” என்றும், அவர் வேதனை தெரிவித்தார். 

மேலும், “பொது மக்களின் பாதுகாப்பிற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இது விடுமுறைக்காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை பொது மக்கள் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என்றும், முதலமைச்சர் தனது வேதனையைப் பதிவு செய்தார். 

இதன் காரணமாக, “தமிழகத்தில், தளர்வுகள் அற்ற ஊரடங்கு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அதே நேரத்தில், “தமிழகத்தில் தளர்வுகள் ஏதுமின்றி மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும் என்றும், அதற்கு அடுத்த வாரத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, “தளர்வுகள் ஏதுமின்றி தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும்” என்று, தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.