தமிழகத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று புதிய உச்சத்தை எட்டும்” என்று, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் 2 வது அலையானது மிக தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. 

இவற்றுடன், சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அத்துடன், கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் கடந்த 10 ஆம் தேதி முதல், வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், கொரோனா தொற்று குறைந்ததாகத் தெரியவில்லை.

அத்துடன், வரும் 24 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், இன்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு, ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முக்கிய முடிவும் எடுக்கப்படும் என்றும், கூறப்பட்டது.

அதன் படி, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சற்று முன்பாக நடைபெற்றது.

முதலமைச்சரின் இந்த மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், அருண்குமார் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழு நேரிடையாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, “தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்” என்று, மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்தனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பானது, தற்போது 35 ஆயிரத்தை கடந்து பரவிக்கொண்டு இருக்கிறது. அத்துடன், நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் 500 நெருங்கி வருகிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதால் கொரோனா தொற்று குறைய நேரிடலாம் என்று மருத்துவக் குழு தமிழக அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.

அப்போது, மருத்துவக் குழுவினரிடம் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “தமிழகத்தில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று புதிய உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, “சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அவர்கள் கூறும் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு, ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். 

அதன்படி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் தற்போது தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில், கொரோனா விதிமுறைகளை சில பொதுமக்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை என்று, முதலமைச்சர் கவலையுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.