“24 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா” என்பது குறித்து, அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய முடிவு எடுக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் 2 வது அலையானது மிக தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. 

இவற்றுடன், சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அத்துடன், கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. 

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதன் படி மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கத் தொடக்கத்தில் அனுமதிப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று துளியும் குறையாமல் இன்னும் வேகம் எடுத்த நிலையில், ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக, கடந்த 15 ஆம் தேதி முதல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 35,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். முக்கியமாக, நேற்று ஒரே நாளில் 397 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது, வரும் 24 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்துகளை முதலமைச்சர் கேட்க உள்ளார்.

குறிப்பாக, “தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?” என்பது குறித்து, நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முக்கியமாக, கொரோனா ஊரடங்கை மே 24 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிப்பது குறித்து, சட்டமன்ற அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் அதிகமாக உள்ளதால், இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, “ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என்றும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி தமிழக மக்களைக் காப்பாற்றுங்கள்” என்றும், தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.