“தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ என்கிற இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம் பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

இதில், “விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள் நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்றும், சீமான் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

“இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தைச் சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அந்த பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப் புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல” என்றும், சீமான் சுட்டிக்காட்டி உள்ளார். 

“ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும், மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக நின்று, அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப் போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதி கேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது” என்றும், சீமான் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

“தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இந்த தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர் வினையையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள் நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்த போதும், சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபு வழிப் போரையே இறுதி வரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்த போதும், அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக் கூட்டம் போலக் காட்ட முயலும் இந்த தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒரு நாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

“ஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இந்த தொடரை, ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும்” என்றும், சீமான் வலியுறுத்தி உள்ளார்.

“ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட 'இனம்', 'மெட்ராஸ் கபே' போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, 'தி பேமிலி மேன் 2' எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும்” என்றும், சீமான் கோரிக்கை விடுத்து உள்ளார்.

“அதனைச் செய்ய மறுத்து, 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால், மிக மோசமான எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்” என்றும், சீமான் காட்டமான ஒரு எச்சரிக்கையைத் தெரிவித்திருக்கிறார்.