கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால், நோயாளி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இப்படியான சூழலில், “நோயாளி ராஜாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் குழாயை மருத்துவர் அகற்றியதால், ராஜாவுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு என் கணவர் உயிரிழந்து விட்டதாக” பாதிக்கப்பட்ட ராஜாவின் மனைவி, மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளார். 

அத்துடன், “ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்த மற்றொரு நோயாளிக்கு, ஆக்சிஜன் செலுத்துவதற்காக, என் கணவர் ராஜாவுக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் குழாயை மருத்துவர் அகற்றியதாகவும், அப்போது நான் எவ்வளவோ தடுத்தும், என்னைத் தள்ளி விட்டுவிட்டு மருத்துவர் ஆக்சிஜன் குழாயை எடுத்துச் சென்று விட்டதாகவும்” உயிரிழந்த ராஜாவின் மனைவி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், கணவர் ராஜா உயிரிழந்த நிலையில், அவரின் அருகில் அவரது மனைவி கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தற்போது, மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. 

இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் உடனடியாக நடத்தப்பட்டது. 

இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், “80 சதவீதம் தொற்று பாதிக்கப்பட்டிருந்த ராஜாவுக்கு கடந்த 15 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக” குறிப்பிட்டார். 

மேலும், “உணவு சாப்பிடும் போது, ஆக்சிஜன் இயந்திரம் புதிதாக மாற்றப்பட்டதாகவும், அப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்” மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, “துரதிட்டமாக நடந்த இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு” அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல், ஆக்சிஜன் மாஸ்க், சிலிண்டரை அரசு மருத்துவர் ஒருவரே எடுத்துச் சென்றதனால் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று, கூறியுள்ளார்.

“அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்குத் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களைக் காத்திடத் துரித நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்திட வேண்டும்”  என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.