சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில் காதலனை மறக்க வைக்க சிறுமியுடன் தியானம் செய்த கோயில் அர்ச்சகர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை போரூர் அடுத்து உள்ள அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த 50 வயதான சந்திரமவுலி என்பவர், அந்தப் பகுதியில் உள்ள கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த சிறுமியும் அந்த இளைஞனும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழ்ந்து வந்தனர். 

இதனையடுத்து, சிறுமியின் காதல் விவகாரம், அவரது பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த இளைஞனைப் பற்றி அந்த சிறுமியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர். அத்துடன், அந்த சிறுமிக்கு அவரின் பெற்றோர் “காதல் வேண்டாம், இது அதற்கான வயசும் அல்ல” என்று அறிவுரையும் வழங்கி உள்ளனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த சிறுமி, தன்னுடைய காதலை மேலும் தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக, அந்த சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், சிறுமியும் அவரது பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

அந்த நேரம் பார்த்து, அந்த பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்ற சிறுமியின் பெற்றோர், கோயிலில் பணியாற்றும் அர்ச்சகரான 50 வயதான சந்திரமவுலியிடம், தன் மகளின் காதல் விசயத்தைப் பற்றி கூறி “பரிகாரம் எதுவும் இருக்கிறதா?” என்று ஆலோசனை கேட்டதாகத் தெரிகிறது. 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த கோயில் அர்ச்சகர் 50 வயதான சந்திரமவுலி, “உங்கள் மகள் அவளை காதலை மறக்க வேண்டும் என்றால், அவருடன் தனியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். அப்படி தியானம் செய்யும் போது, காதலை மறந்து அந்த சிறுமி ஆன்மிக பாதையில் செல்லக்கூடும்” என்று, ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதனை நம்பிய சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை, அந்த அர்ச்சகரிடம் தியானத்திற்காக அனுப்பி உள்ளனர்.

அதன் படி, அந்த சிறுமியைத் தனியாக அமர வைத்து தியானத்தில் அமர வைப்பது போல், அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சிறுமியின் ஆடைகளைக் களைத்து, அவர் பலவந்தமாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது., இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, கூச்சலிட்ட படியே சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே, அந்த கோயில் அர்ச்சகர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.

மேலும், சிறுமியும் சிறுமியின் பெற்றோரும் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, அந்த கோயில் அர்ச்சகர் சந்திரமவுலி தலைமறைவானார்.

இந்நிலையில், 3 ஆண்டுகள் கழித்து அந்த சிறுமிக்கு தற்போது 19 வயது ஆகும் நிலையில், அனைவரும் இந்த விசயத்தை மறந்து இருப்பார்கள் என்று எண்ணிய அந்த கோயில் அர்ச்சகர் சந்திரமவுலி, மீண்டும் அய்யப்பன்தாங்கல் பகுதிக்குத் திரும்பி உள்ளார். இது தொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கோயில் அர்ச்சகரை, 3 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.