தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம் பெறவில்லை.

இந்நிலையில்  தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மொழியான தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகளும் புதிய அறிவிப்பாணையில் உள்ளன.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மறு அறிவிப்பில் தகுதிக்கான பிரிவில் செம்மொழி தமிழ் மொழி சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்பட்டு தொல்லியல் துறை இயக்குனர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்பிற்கானத் தகுதியில், தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்பிற்கானத் தகுதியில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், திருத்தப்பட்ட அறிவிக்கையில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடித்தளமாக விளங்குபவை மொழிகளே! அவற்றைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பா.ஜ.க கடைபிடிக்கவும் வேண்டாம்; அதை மாநில அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கவும் வேண்டாம்!”

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்' என்று பதிவிட்டுள்ளார்.