எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் புதிய முயற்சியாக “புள்ளி ராஜாவை” தொடர்ந்து, “பஞ்ச் பாட்டி”யை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” இந்த வாசகத்தை யாரும் அவ்வளவு சாதாரணமாக மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த வசனம் தமிழகத்தில் ரொம்ப ஃபேமஸ்.

அதாவது, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய பிரச்சாரம் செய்ய NACO (நேஷனல் எய்ட்ஸ் கண்ட்ரோல் 

ஆர்கனைசேஷன்) பெரும் முயற்சி எடுத்து வந்தது. அப்போது, “ஒரு மனிதனுக்கு எய்ட்ஸ் நோய் எதனால் வரும்? எதனால் வராது?” என்று, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் முயற்சியில் இறங்கியது. 

இதற்காக, எந்த ஒரு சாதி, மத, இனத்தையும் சாராத தமிழ் ஆண் பெயர் தேவைப் பட்டு உள்ளது. அப்படி, அவர்கள் தேடிக் கண்டு பிடித்த  கற்பனையான பெயர் தான் புள்ளி ராஜா. அதனால், இந்த பெயரை, தமிழகத்தைச் சேர்ந்த யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இப்படியாக ஆரம்பித்த விழிப்புணர்வுப் பிரசாரம் தான் “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” என்ற கேள்வியும். 

தமிழக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்த இந்த விளம்பரம் கடந்த 2003 ஆம் ஆண்டு, எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது. 

அதே நேரத்தில், “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” என்ற இந்த கேள்வி எழுப்பிய தாக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது. இதனால், இந்த பெயரை வைத்தே, பலரும் பலரையும் கிண்டல் அடிக்கத் தொடங்கினர். பலரும், இந்த வாசகத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதால், இந்த வாசகம் அதன் பிறகு சர்ச்சைக்குரிய வாசகமாக விமர்சிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2005 ஆம் ஆண்டு, “சண்டேன்னா இரண்டு” என்ற வாசகம் விளம்பரப்படுத்தப்பட்டது. பின் நாட்களில் இதுவும் சர்ச்சைக்குரிய வாசகமாக இருக்கிறதே என்ற விமர்சனங்களும் எழுந்தது. ஆனால், அது குறிப்பிட்ட ஒரு நாளிதழின் விளம்பரம் என்று தெரியவந்தது.

அதன் தொடர்ச்சியாக, “அர்ஜுன் அம்மா யாரு?” என்ற வாசகம் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த வாசகம், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் மிகவும் பிரபலம் அடைந்தது. ஆனால், இது “ஆரோக்யா பாலின் விளம்பரம்” என்று, பின்னர் தெரிய வந்த போது, அனைத்து தரப்பு மக்களும் ஆச்சரிய பெரு மூச்சு விட்டனர்.

இப்படியாக விளம்பர யுக்திகள் மற்றும் வாசகங்களைக் கடந்த காலங்களில் தமிழ் நாடு நிறையக் கண்டு இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் தடுப்பது குறித்து பொது மக்களிடம் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “பஞ்ச் பாட்டி” என்ற கதாபாத்திரத்தைப் புதிதாக அறிமுகம் செய்ய இருப்பதாகத் தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாகத் தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் தீபக் ஜேக்கப் கூறுகையில், “தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் தடுப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்று, தெரிவித்தார். 

தற்போது, புதிய முயற்சியாக மக்களிடையே புது விதமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த “பஞ்ச் பாட்டி” என்ற கதாபாத்திரத்தை நாங்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். கண்டிப்பாக, இதன் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும், அவர் தெரிவித்தார். 

“பஞ்ச் பாட்டி” இந்த தமிழகத்தை என்னவெல்லாம் செய்யப் போறாங்களோ?! பொறுத்திருந்து பார்க்கலாம்..