சென்னையில் பெண் போலீஸ்சுடன் ஆண் போலீஸ் ஒருவர் கள்ளக் காதலில் ஈடுபட்டு இருந்ததை கண்டுபிடித்த மனைவி, அதனைத் தட்டிக்கேட்டதால், ஆண் போலீஸ் விவாகரத்து கேட்டு மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சியைச் சேர்ந்த 22 வயதான பிரசாத், கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படித்த 22 வயதான அன்புக்கரசி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், பெற்றோரை எதிர்த்துக் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பெற்றோர் எதிர்ப்பு காரணமாக, திருமணத்திற்குப் பிறகு காதல் தம்பதிகள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறி வசித்து வந்தனர். 

இதனையடுத்து, இந்த காதல் தம்பதிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர்களது இரு வீட்டார் பெற்றோர்களும், இந்த இவர்களை ஏற்றுக்கொண்டனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரசாத் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஆவடியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் காவலராகப் பணியில் சேர்ந்து உள்ளார். அங்கு பணியில் சேர்ந்த அடுத்த சில நாட்களில் அவரின் செயல்பாடுகளில் சிறிது வித்தியாசம் இருந்துள்ளது. அதன் 
தொடர்ச்சியாக, தனது மனைவி, மகனுடன் ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்து உள்ளார். 

அப்போது, பிரசாத்திற்கும் அன்புக்கரசிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக, காரணமின்றி அன்புக்கரசியிடம் வரதட்சணை கேட்டு பிரசாத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கணவனின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து சந்தேகப்பட்ட அவரது மனைவி அன்புக்கரசி, கணவனுக்குத் தெரியாமல் அவரது செல்போனை எடுத்து ஆராய்ந்து பார்த்து உள்ளார்.

அப்போது, கணவன் பிரசாத்திற்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிலிருந்ததை அவரது செல்போன் காட்டிக்கொடுத்து இருக்கிறது.  

குறிப்பாக, கணவருடன் பணிபுரிந்து வரும் திருமணமான பெண் காவலர் ஒருவருடன், கணவன் பிரசாத் தகாத முறையில் பேசும் ஆடியோவைக் கேட்டு அன்புக்குரசி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாகத் தனது கணவரிடம் அவர் விளக்கம் கேட்டு இருக்கிறார். ஆனால், இதைப் பற்றி கண்டுகொள்ளாமல், அவர் மீண்டும் மீண்டும் மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார்.

இதனையடுத்து. அவர் மனைவி அன்புக்கரசி இது தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளார். அந்த புகாரை அடுத்து, சம்மந்தப்பட்ட அந்த பெண் காவலர் பணியிடமாற்றமும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியான கணவன் பிரசாத், தன் மனைவி அன்புக்கரசிக்கு விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அத்துடன், விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது முதல் மனைவியையும், தன்னுடைய குழந்தையையும் அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அன்புக்கரசி, இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, திருச்சியில் போலீசால் போலீஸ்சுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட திருநங்கை போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால், உதவி ஆய்வாளர் உட்பட 2 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.