டேராடூனில் இருந்து தப்பிச்சென்ற சாமியார் சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் டெல்லியில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை அடுத்து உள்ள செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, சமூக வலைத்தளங்களில் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். 

முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் மட்டுமே கடந்த வாரம் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்கள். ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவசங்கர் பாபா மட்டும், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அத்துடன், குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா, நெஞ்சு வலி காரணமாக உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், சிவசங்கர் பாபா மீது இது வரை 15 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டு உள்ளது. அந்தப் புகார்கள் குறித்து, சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த வழக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில், சிவசங்கர் பாபா தற்போது தலைமறைவாகி விட்டதாகவே காவல் துறையினர் கருதும் நிலையில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல்
வழக்குகளைத் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

 இதனையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார், நேற்றைய தினம் டேராடூன் விரைந்தனர். அத்துடன், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, டேராடூனுக்குச் சென்ற தனிப்படை போலீசார், “சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இல்லை” என்பதை உறுதி செய்தனர். இதனால், அவர் போலீசாருக்கு பயந்து, தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர், அவரைத் தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.

மேலும், சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் தரை மார்க்கமாக நேபாளத்திற்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அத்துடன், வட மாநில சாமியர்களின் மடத்தில் சிவசங்கர் பாபா பதுங்கியுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தான், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார், டெல்லியில் வைத்து தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

தலைநகர் டெல்லியின் காசியாபாத்தில் தான், சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து டெல்லி போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்து, அவர்களது உதவியுடன், காசியாபாத் பகுதியில் இருக்கும் சித்தரஞ்சன் என்னும் இடத்தில் பதுங்கியிருந்த சாமியார் சிவசங்கர் பாபாவை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

சிவசங்கர் பாபா தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்று அல்லது நாளை அவர் சென்னை அழைத்து வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர். 

தமிழகம் திரும்பியதும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் குறித்து சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில், சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சிவசங்கர் பாபா தமிழகத்தில் இருந்து தப்பித்துச் செல்ல பெண் பக்தர் ஒருவர் உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்த பெண் பக்தரின் செல்போனை எண்ணை வைத்து, சிவசங்கர் பாபாவை அதிரடியாக கைது செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.