யூரோ கோப்பை கால்பந்தாட்ட வரலாற்றில் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்திருக்கிறார் ரொனால்டோ.

16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது, கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11 நாடுகளில் நடந்து வரும் இந்த போட்டியில், 24 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், புடாபெஸ்ட் நகரில் நேற்று நடைபெற்ற F பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் - ஹங்கேரி அணிகள் மோதின. இதில், முதல் பாதியில் இரு அணியினரும் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை.

போட்டியின் 84 வது நிமிடத்தில் ரபெல் குயரிரோ முதல் கோல் போட்டார். ஆனால், ரசிகர்கள் அனைவரும் ரொனால்டோவிடம் இருந்து ஒரு கோலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். 

அந்த நேரத்தில் தான், ஹங்கேரி வீரர் செய்த தவறால் போர்ச்சுகலுக்கு பெனால்ட்டி ஷூட் வாய்ப்பு கிடைத்துப்போனது. இதனால், பந்து கேப்டன் ரொனால்டோவின் காலுக்குப்போன நிலையில், அந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி கோலாக்கினார் ரொனால்டோ. அடுத்த ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் அணிக்கான 2 வது கோலையும் ரொனால்டோ அடித்து வரலாறு படைத்தார்.

இதனால், போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை தோற்கடித்தது. இந்த போட்டியில் 2 கோல் அடித்த 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். 

அதன் படி, ரொனால்டோ மொத்தமாக 11 கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக, பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக பார்க்கப்பட்டு வந்தது. 

குறிப்பாக, தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர் கால்பாந்து போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுள்ளார். 

முக்கியமாக, புதிய சாதனையை படைத்திருக்கும் ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக இதுவரை 106 கோல்கள் அடித்து உள்ளார். இதனால், ரொனால்டோ விரைவில் உலக சாதனையும் படைக்க இருக்கிறார். 

அதாவது, ஒரு நாட்டுக்காக அதிகபட்ச கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 109 கோல்கள் அடித்து ஈரானின் அலி டே முதலிடத்தில் தற்போது உள்ளார். ரொனால்டோ, இன்னும் 4 கோல்கள் அடித்தால் அலி டேவின் சாதனையை அவர் முறியடித்துவிடுவார்.

இதனிடையே போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அப்போது, யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சரான கோக்க கோலாவின் 2 பாட்டில்கள் அந்த மேஜையின் முன்பாக வைக்கப்படுவது வழக்கமான ஒரு நடைமுறையாகும். இந்த நிகழ்வு, டிவியில் ஒளிபரப்பாகும் போது கோக்க கோலா பாட்டில்கள் தெரிய வேண்டும் என்பது தான் நடைமுறையாக இருந்து வருகிறது. 

அதன்படி நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, வருகை தந்த ரொனால்டோ, தனது முன்பாக இருந்த 2 கோக் பாட்டில்களையும் எடுத்து கீழே மறைத்துவைத்தார். பின்னர், தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து “தண்ணீர் குடியுங்கள்” என்றார். 

ரொனால்டோவின் கோக்க கோலாவிற்கு எதிரான இந்த செயல்பாடு பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.