விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள பப்ஜி மதன், போலீசாருக்கு சவால் விடும் வகையில் பேசி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை, சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்து சில கும்பல்கள் விளையாடி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த சூழலில் தான், “பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ்” பற்றி பேசுவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான், மதன் யூடியூப் சேனல்.

கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகள் அதிகம் மூழ்கி உள்ளனர். அப்படியான சிறுவர் சிறுமிகளைக் குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட  விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தவர்களை, அவர் தன் பக்கம் அதிகமான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இப்படியாக,  “மதன்' யூடியூப் சேனலுக்கு” இது வரை 7 லட்சத்திற்கு அதிகமாகவும், “டாக்ஸிக் மதன் 18+” யூடியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் Subcribers-ம் தற்போது உள்ளனர்.

அப்படி, ஆன்லைனில் விளையாடும் போது, தன்னுடன் விளையாடும் சக போட்டியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே கொண்டவர் தான் இந்த யூடியூபர் மதன்.

அத்துடன், தன்னுடன் ஆன்லைனில் விளையாடுவது பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் உச்சத்தில் இருக்கும்.

ஆன்லைனில் விளையாடும் போது, மதனின் ஆபாச பேச்சுகளுக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என குறிப்பிடுவதோடு, என்னிடம் உள்ள பணமும், எனது வழக்கறிஞரும் என்னை காப்பாற்றி விடுவார்கள் என்று, புகழ் போதையில் பேசி, மற்றவர்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் விளையாடும் போது, அவர் கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

அப்படி, மதன் பேசியதாக ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கெட்ட வார்த்தையால் போலீசாரை திட்டும் ஆபாச வார்த்தைகள் நிறைந்திருக்கின்றன.

இப்படி, சென்னையில் பதிவான வழக்குகள் தொடர்பாக மதனை போலீசார் நேரில் ஆஜராகச் சொன்ன நிலையில் தான், அவர் நேற்றைய தினம் தலைமறைவானார்.

ஆனால், அவர் எப்போதும் போல வீடியோ கேமில் பங்கேற்று நேற்றைய தினம் விளையாடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது, தன்னை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம், சிறு தவறு செய்தாலும் கைது நடவடிக்கை உறுதி எனவும், ஆனால் அது முடியாது” எனவும் மாதன் கூறியுள்ளார். 

அத்துடன், வழக்கமான ஆபாசமாக பேசும் மதன், இந்த முறை தத்துவங்களாகப் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, IP முகவரிகள் மூலம் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாத VIRTUAL PRIVATE NETWORK யை, மதன் பயன்படுத்தி வந்ததாதல் அவரின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாமல் போலீசார் சிரமப்பட்டு வந்தனர். எனினும், அவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, விரைவில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

முக்கியமாக, மதனின் யூடியூப் மற்றும் இண்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தமிழக போலீசார் கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.