“தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 3 வது அலை வர வாய்ப்புள்ளதாகவும், இதை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றும், மருத்துவக் கல்வி இயக்குநர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம், முதல் அலையைக் காட்டிலும், 2 வது அலையில் தான் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்குக் காரணம், முதல் அலையைக் காட்டிலும் இந்த 2 வது அலையில் அதிகப்படியான உயிர் இழப்புகள் ஏற்பட்டதே முக்கிய காரணம். 

இப்படியாக, கொரோனா 2 வது அலையில், பலி எண்ணிக்கையும், அதன் பாதிப்பும் மிகப் பெரிய அளவில் இருந்து, தற்போது சற்று குறைந்துகொண்டிருக்கும் நிலையில், கொரோனாவின் 3 வது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் என்ற செய்திகளும் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

இதனால், “இந்தியாவில் கொரோனா 3 வது அலை உருவாகுமா?” என்கிற கேள்வி பொது மக்கள் மத்தியில் தற்போது எழுந்து உள்ளது.

அத்துடன், “இங்கிலாந்து, காங்கோ உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தற்போது 3 ஆம் அலையாகப் பரவிக்கொண்டு இருப்பதாக” அதன் தாக்கம் பெரிய அளவில் இருப்பதாகவும் செய்திகள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.

இந்த சூழலில் தான், இந்தியாவில் கொரோனாவின் 3 வது அலை ஏற்பட்டால், அதன் தாக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சில செய்திகள் வெளியானது. இந்த செய்தி, இந்தியாவில் பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக, “தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 3 வது அலை வர வாய்ப்புள்ளதாகவும், இதை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றும், மருத்துவக் கல்வி இயக்குநர் இன்று அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கொரோனா 3 வது அலை தமிழ்நாட்டில் வர வாய்ப்பு உள்ளதாகவும், இதன் தாக்கம் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களிடம் இருக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்” என்று, சுட்டிக்காட்டி உள்ளார். 

“இதனை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றும், அவர் அறிவுறுத்தி உள்ளார். 

“வரப்போகும் 3 வது புதிய அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், குழந்தைகள் நல மருத்துவர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

“மாநிலத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், ஐசியு வசதியுடன் கூடிய 100 படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார். 

“குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசரக் காலப் பணிக்காக தயார்ப்படுத்திட வேண்டும் என்றும், பொது மருத்துவம், மயக்கவியல் துறை மருத்துவர்களும் இந்த 3 வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்றும், அந்த சுற்றறிக்கையில் அவர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார். 

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். “கொரோனா 3 வது அலை குழந்தைகளைப் 
பாதிக்கும் என்பது தவறான தகவல்” என்று, கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.