“அதிமுக தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.. கட்சியை அழிய விட மாட்டேன்” என்று, திருப்பூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி காத்தவராயன் உடன் சசிகலா பேசும் புதிய ஆடியோ தற்போது வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா பேசிய ஆடியோ தான், அக்கட்சியின் சமீபத்திய ஹாட் டாப்பிகாக இருந்து வருகிறது. 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களிடையே சசிகலா பேசும் ஆடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால், அதிமுகவை மீண்டும் சசிகலா கைப்பற்றப் போகிறரா? என்கிற கேள்வியும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

அத்துடன், சசிகலா அரசியல் ரீதியிலாக காய் நகர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். தற்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் முடிந்த சட்டமன்றத் தேர்தல் அதிமுக தோல்வியடைந்து, திமுக ஆட்சிக்கும் வந்துள்ளது. 

இந்நிலையில் தான், கடந்த ஒருமாதமாக அதிமுக வினரிடையே, தொடர்புக்கொண்டு சசிகலா தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் சசிகலா பேசும் இந்த ஆடியோக்கள் எல்லாம் அதிமுக வில் புதிய புயலை கிளப்பி வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்கு சரிவரப் பதில் அளிக்காமல் இருந்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், நேற்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், “அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு எதிராகவும் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் படி, சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்பட மொத்தம் 16 பேர் அதிமுக வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

குறிப்பாக, அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தியும் அதிரடியாக நீக்கப்பட்டார். 

இந்த நிலையில் தான், திருப்பூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி காத்தவராயன் உடன், சசிகலா பேசும் புதிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. காத்தவராயன் என்பவர், அவினாசி சட்டமன்றத் தொகுதி அம்மா பேரவையின் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். 

அதன் படி, தற்போது வெளியாகி உள்ள இந்த ஆடியோவில், அதிமுக பிரமுகர் காத்தவராயனிடம் சசிகலா நலம் விசாரித்தார். 

அதற்குப் பதில் பேசிய காத்தரவராயன், “நீங்க இல்லாதது ரொம்ப குறையா இருக்குங்க அம்மா. நீங்க கட்டாயம் அரசியலுக்கு வரனும்” என்று, அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய சசிகலா, “நான் கட்டாயம் அரசியலுக்கு வருவேன். தொண்டர்கள் தொடர்ந்து என்னிடம் இதைக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். நான் நிச்சயம் வந்துவிடுவேன் கவலைப்படாதீங்க. விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன்” என்று, பேசி உள்ளார். இந்த ஆடியோ தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.