இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான தயாநிதி அழகிரி முன்னதாக தனது தயாரிப்பு நிறுவனமான க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியத்தில் நடிகர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம்  திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் கவுரவ் இயக்கிய தூங்கா நகரம் திரைப்படத்தை தயாரித்த தயாநிதி அழகிரி, இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த அவரது 50-வது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் பையா, நான் மகான் அல்ல, ரத்தசரித்திரம், வானம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட பல திரைப்படங்களை  தனது க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அனுஷா தயாநிதி தம்பதிக்கு  இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது இரண்டாவது  மகனுக்கு தற்போது வேதாந்த் என பெயர் சூட்டி மனைவி மற்றும் இரண்டாவது மகனோடு இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தயாநிதி அழகிரியின் இரண்டாவது மகன் புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.