சென்னையில் பிரபலமான தனியார்  பள்ளியான பிஎஸ்பிபி மேல்நிலைப்பள்ளியில்  பணிபுரியும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில தினங்களுக்கு முன் புகார் எழுந்தது. கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஆன்லைன்  வகுப்பிலும் வாட்ஸ்-அப் குறுந்தகவல்களிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர் ராஜகோபாலன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 

இப்போது நடந்திருக்கும் இந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிரியர் ராஜகோபாலன் இது போன்று பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்திருப்பதாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர். 5 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கொடுமையை பள்ளி நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் விட்டது ஏன் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது பள்ளி நிர்வாகம் போலீசாரின் விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஸ்வரூபம் அடைந்துள்ள பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் கைதான விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலும்  இது அழுத்தமாக குறித்து பேசியுள்ளார். பிஎஸ்பிபி சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால் அந்த பதிவில், 

பிஎஸ்பிபி பள்ளியில் நடந்தேறிய பாலியல் தொல்லை விவகாரம் என்னை மிகுந்த  அருவருப்படைய வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிஎஸ்பிபி பள்ளி, 

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். 

இதுபோன்ற குற்றங்கள் கடுமையாக  கையாண்டு தீர்வு காண வேண்டும் .

எனது நண்பர் மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களிடம்  இந்த வழக்கை மிக கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 

என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து திடுக்கிடும் உண்மைகள்  வெளிவந்த நிலையில்  இந்த வழக்கின் மீது தமிழக அரசு முக்கிய கவனம் எடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தீர்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்  என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.