கொரோனா வைரஸ் தொற்றால்  மொத்த நாடும் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த வேளையில் தினசரி தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500ஐ நெருங்கி வரும் இந்த சூழலில்  நமக்கு நன்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரை நாம் இழந்து வருகிறோம்.  

தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையும் சிலர் உயிரிழப்பதையும் நாம் பார்க்கிறோம்.அந்த வகையில் இன்று மேலும் ஒரு பிரபல தமிழ் நடிகரான  வெங்கட் சுபா உயிரிழந்துள்ளார். 60 வயதான வெங்கட் சுபா தமிழ்சினிமாவில் அழகிய தீயே மொழி கண்ட நாள் முதல் உள்ளிட்ட  பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் வெங்கட் சுபா  டூரிங் டாக்கீஸ் யூட்யூப் சேனலின் மூலம் தமிழ் திரைப்படங்களை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வெங்கட் சுபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கிட்டத்தட்ட பத்து நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த வெங்கட் சுபா தற்போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். நடிகர் வெங்கட் சுபாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாம் அனைவரும் கட்டாயம் முக்கவசம் அணிவோம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம், நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்.