“திருமணம் செய்வதாக” கூறி ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் இது பாலியல் பலாத்கார குற்றவாளிகள் எல்லாம் பிடிபடும் காலம் போல!?”

தமிழகத்தில் தற்போது பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் 59 வயதான ராஜகோபாலன், பாலியல் வழக்குதான் ஹாட் டாப்பிகாக இருந்து வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் சென்னையில் மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட ஆசிரியர் ஆனந்த் அந்த பள்ளியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டதாக” துணை நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

நடிகர் சசிக்குமாரின் நாடோடிகள் முதல் பாகத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தினி. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

நடிகை சாந்தினி, சற்று முன்பாக சென்னை காவலர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், என்னை திருமணம் செய்வதாகக் கூறி ஒரே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக வசித்து வந்தோம் என்றும், என்னை கர்ப்பமாக்கி விட்டு, கருகலைப்பு செய்ய வைத்துவிட்டார்” என்றும், அந்த நடிகை பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “என்னை திருமணம் செய்துகொள்ளாமல் அவர் ஏமாற்றி வந்ததோடு, என்னை அடித்து துன்புறுத்தி என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடு போவதாகவும் அவர் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார்” என்றும், அவர் பரபரப்பான குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார். 

மேலும், “என்னை திருமணம் செய்யாமல் கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்த, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட துணை நடிகை புகாரில் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்வதாக அவர் மிரட்டுகிறார் என்றும், அதனால் எனக்குப் பாதுகாப்பு வழக் வேண்டும்” என்றும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைத் துணை நடிகை சாந்தினி சுமத்தி உள்ளார்.

இந்த புகாருடன், இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் மற்றும் மிரட்டல் விடுத்த குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் அவர் தற்போது செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு உள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் தொலைப்பேசி மூலகமாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், “ துணை நடிகை சாந்தினி எனக்கு யார் என்றே தெரியாது என்றும், பணம் பறிக்கும் நோக்கில் இவர் இவ்வாறு செயல்படுகிறார்” என்றும், குற்றம்சாட்டி, தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.