நெடுஞ்சாலை துறை ஊழல்கள் மீது நெடுஞ்சாலை துறை செயலர் கார்த்திக் எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுபற்றி அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், 


” நெடுஞ்சாலை துறையில் ரூ 494 கோடிக்கு விடப்பட்ட தஞ்சாவூர் சாலை F டெண்டர் (Fixed Tender)  அறப்போர் புகாருக்கு பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது. JSV என்னும் நிறுவனம் தான் இந்த டெண்டரில் வெற்றி பெறுவதாக தகவல் உள்ளது என்று டெண்டர் முடிவதற்கு முன்பே அறப்போர் இயக்கம் நெடுஞ்சாலை துறை செயலருக்கு நவம்பர் 18 காலை 9.42 மணிக்கு புகார் அனுப்பி இருந்தோம். அதே போல் நவம்பர் 19 காலை 11 மணிக்கு டெண்டர் திறந்த பிறகு, இதே நிறுவனம் தான் வெற்றி பெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல தமிழகத்தில் நடப்பது E டெண்டர் இல்லை. F டெண்டர்கள் தான் என்பது ஊர்ஜிதமாகிறது. 

மற்றொரு டெண்டரான ரூ 656 கோடி டெண்டரும் அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்த RR Infra Construction தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த டெண்டரையும் நெடுஞ்சாலை துறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அறப்போர் இயக்கம் இந்த டெண்டர்கள் மீதான குற்றச்சாட்டுகளை டிசம்பர் 4 வெளியிட்ட பிறகு, நெடுஞ்சாலை துறை டிசம்பர் 7 அன்று ரூ 494 கோடி டெண்டரை ரத்து செய்துள்ளது. ரத்துக்கான காரணம் நிர்வாக காரணம் என்று எப்பொழுதும் போல பொய் சொல்லி உள்ளது.


தெளிவாக ஊழல் முறைகேட்டிற்கான முகாந்திரத்தை இது காட்டுகிறது. நெடுஞ்சாலை துறை செயலர் திரு கார்த்திக் IAS அவர்கள் தற்பொழுது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? மேலும் JSV நிறுவனத்திற்கு தேவையான முன் அனுபவம் இல்லை என்று கூறப்படும் பட்சத்தில், Technical roundல் அவர்கள் உண்மையிலேயே தகுதி பெற்றவர்களா என்பதும், பொறியாளர்கள் அவர்களது Financial Bid ஐ திறந்தது சரிதானா என்பதும் விசாரிக்கப்படுமா ?? இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? இதில் லஞ்சமாக பணம் கை மாறியதா என்பதை விசாரித்து நடவடிக்கை எடுப்பாரா? ” என்று கூறப்பட்டு உள்ளது.