நடிகர் ரஜினிகாந்தின் திடீர் அரசியல் பின்வாங்கலால் சினிமா பிரபலங்கள் யார் யார் என்னென்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்..

“கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலும் வேணாம் ஒன்னும் வேணாம்” என்று, நடிகர் ரஜினி நேற்று அதிரடியாக அறிவித்த நிலையில், தமிழ் சினிமாவின் சக நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசன்

“ரஜினியின் ரசிகர்கள் மன நிலைதான் எனக்கும். சற்று ஏமாற்றமாக இருந்தாலும் என் நண்பன் ரஜினி உடல்நிலை எனக்கு மிகவும் முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் நலமாக வாழ வேண்டும். தேர்தல் பிரச்சாரம் முடிந்த உடன் அவரை நேரில் சந்திப்பேன்” என்று, கூறியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ரஜினியின் இந்த முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி

“தலைவா.. உங்கள் ஆரோக்கியம் தான் எங்கள் அதிசயம்; அற்புதம்!” என்று, குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்

“குருவே நீங்கள் எடுத்திருக்கும் முடிவு 100 சதவீதம் சரி தான். வேறு எதைக் காட்டிலும் எங்களுக்கு உங்களது உடல் நலம் மிகவும் முக்கியம். உங்களை நம்பியிருக்கும் மக்கள் மீது அக்கறை வைத்து சுயநலமற்ற முடிவை எடுத்துள்ளீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களின் நலம் மீதே அக்கறை கொண்டவராக இருப்பதால் தான் பெரிய இடத்தில் நீங்கள் உள்ளீர்கள். உடல் நலம் பெற வேண்டி ராகவேந்திர சுவாமியை தரிசனம் செய்கிறேன். குருவே சரணம்” என்று,  நடிகர் ராகவா லாரனஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

“தலைவா.. வருத்தப்பட வேண்டாம். ஒரு வேளை உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவரைப் பெற நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம். உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று, டிவிட் செய்துள்ளார்.

இயக்குநர் வ.கெளதமன்

“ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதும் பலர் எதிர்த்தார்கள். ஆனால், அதனை தமிழ் பேரரசு கட்சி வரவேற்கிறது. இந்திய ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கலாம். மக்களுக்கு சேவை செய்ய வரலாம். ஆனால், யாருடைய தூண்டுதலும் யாருடைய வற்புறுத்தலுக்கும் இணங்க, அடிமைப்பட்டு சிதைந்து கிடக்கும் மக்களை அடமானம் வைக்க வராதீர்கள் என்று தமிழ்ப் பேரரசு கட்சி கூறியது. தற்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று உடல் நிலையை காரணம் காட்டி கூறியிருக்கிறார். தன்னுடைய வயதையும், உடல் நிலையும்  காரணம் காட்டிய பிறகு அதைப்பற்றி விமர்சனம் செய்வது தமிழர் அறமில்லை. ஆனால், விருப்பமில்லாத ரஜினியை முடிந்த வரைக்கும் பலவந்தப்படுத்தி கட்சி தொடங்க வற்புறுத்திய பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தலுக்கு முன்பாகவே மிகப்பெரிய படுதோல்வி அடைந்தது.

ரஜினிகாந்தை வைத்து தமிழ்நாட்டில் வித்தை காட்டலாம், ரஜினியை வைத்துக்கொண்டு திமுகவை ஒழித்துவிடலாம், அதிமுகவை ஒழித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ரஜினி மூலமாக வெற்றி அடைந்து, அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் அதிமுகவை இல்லாமல் செய்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருப்பதால் திமுகவும் தப்பித்து விட்டது, அதிமுகவும் தற்போதைக்கு தப்பித்து விட்டது. ஆனால், தமிழ்நாடு மக்கள் இந்த பாஜகவிடம் இருந்து தப்பிக்க வில்லை என்பதை தமிழக மக்கள் நன்றாக உணர வேண்டும்” என்றும், கூறியுள்ளார்.

மேலும், “ரஜினிகாந்த் நல்லாட்சி தருவேன், மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று கூறினார். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் என்ன மாற்றத்தை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். என்ன தியாகம் செய்துள்ளார். பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை தமிழின மக்கள் ரஜினிகாந்திற்கு கொட்டிக் கொடுத்து வருகிறார்கள். பணம், புகழ் என எல்லாவற்றையும் தந்தவர்கள் இந்த தமிழ் மக்கள். ஆனால், இதுவரை இந்த தமிழ் மக்களுக்காக ரஜினிகாந்த் எதுவும் செய்யவில்லை. உண்மையிலேயே மாற்றம் வர வேண்டும் என்றால் ,இந்த தமிழ்நாடு மக்களுக்காக யார் ரத்தம் சிந்தி பாடுபடுகிறார்களோ அவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார். 

நடிகை குஷ்பு

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள கருத்தில், அதில், “அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் சுக்கு நூறாக்கி விட்டது. ஆனால், உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடைய நலம் விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு விஷேசமான, மிக முக்கியமான ஒருவர். நன்றாக ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று, தெரிவித்துள்ளார்.

நடிகை கெளதமி

“ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தைக் கைவிட்டது தமிழக மக்கள் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது. அவர் நல்லபடியாக இருக்க நான் 
வேண்டிக்கொள்கிறேன்” என்று, நடிகை கௌதமி குறிப்பிட்டுள்ளார்.