“அரசியலும் வேணாம் ஒன்னும் வேணாம்” என்று, நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த நிலையில், அவரது முடிவிற்கு சக அரசியல் தலைவர்கள் பலரும் 
கருத்து கூறியுள்ளனர். 

“கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக 
அறிவித்தார். “இதை, நான் அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி 
ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்” என்று, நடிகர் ரஜினிகாந்த் 
தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

“உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்குவதை கைவிடுவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினியின் முடிவை வரவேற்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் அவராக தான் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம் என்ற அடிப்படையில் அவரது வரவு நல்வரவாகட்டும் என்று ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்றேன். தற்போது, அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ள ரஜினியின் முடிவையும் நான் வரவேற்கிறேன். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல, உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே உயிர் வாழ முடியும். அதனால், நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் நலனை பேணி பாதுகாத்திட 
வேண்டும். அவரது ரசிகர்களை போல நானும் ரஜினி உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று, தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக

“ரஜினிகாந்த் உடல் நிலையை கருத்தில்கொண்டு தனது அரசியல் முடிவை அவர் அறிவித்துள்ளார். இதனால், அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்நாடு மக்களுக்கும், கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளை படைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. ரஜினிகாந்த் திமுகவிற்கு ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டார். எதிர் காலத்தில் ரஜினிகாந்த், என்றும் மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும் தான் ஆதரவு அளிப்பார். அவர் சிஸ்டம் சரியில்லை என்று கூறியது அதிமுகவை அல்ல” என்றும், கூறினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக

“ரஜினிகாந்த் முடிவு எந்த பாதிப்பையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தற்போது அவர் அறிவித்திருக்கும் முடிவானது அவரது தனிப்பட்ட முடிவு. அவர் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் யாருடைய அரசியல் வருகையும் அதிமுகவை பாதிக்காது. அவர் தேர்தல் சமயத்தில் தங்களுக்கு குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம்” என்றும், கேட்டுக்கொண்டு உள்ளார்.

கமல் ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

“ரஜினியின் ரசிகர்கள் மன நிலைதான் எனக்கும். சற்று ஏமாற்றமாக இருந்தாலும் என் நண்பன் ரஜினி உடல்நிலை எனக்கு மிகவும் முக்கியம். அவர் எங்கு இருந்தாலும் நலமாக இருக்க வேண்டும். பிரச்சாரம் முடிந்த உடன் அவரை நேரில் சந்திப்பேன்” என்று, தெரிவித்துள்ளார்.

திருமாவளவன், தலைவர், விசிக

“ரஜினிகாந்தின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இது பாஜகவிற்கு தான் பாதிப்பு” என்று,  கூறியுள்ளார். 

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

“இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல் நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல் நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன். உடல் நலனை கருத்திற்கொண்டு ரஜினி எடுத்துள்ள முடிவை நான் வரவேற்கிறேன்” என்றும், சீமான் குறிப்பிட்டுள்ளார்.

பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பாஜக 

“ரஜினிகாந்தின் இந்த முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். அவர், அரசியலுக்கு வந்தால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்தவர்கள் தான் மகிழ்ச்சியடைவார்கள்” என்றும், கூறியுள்ளார்.

கே.எஸ் அழகிரி, தமிழ் மாநில தலைவர், காங்கிரஸ் 

“ரஜினியை போன்ற மன நிலை உடையவர்கள் ஒரு போதும் அரசியல் களத்திற்கு வரமாட்டார்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் செய்ய முடியாது. தேர்தல் அரசியலிலும் பங்கேற்கமாட்டார்கள். கடந்த 1996 ஆம் ஆண்டு சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது கூட ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தயங்கினர்” என்று, குறிப்பிட்டுள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் 

“அரசியல் வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை” என்று, கூறியுள்ளார்.

ஜி. ராமகிருஷ்ணன், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்

“பிகார் போன்று அதிமுக எதிர்ப்பு வாக்குகளைக் குழப்பி, ரஜினியை வைத்து தங்கள் ஆதரவை வளர்த்துக் கொள்ளலாம் என, பாஜக சித்து விளையாட்டை ஆடியது. இதில், ரஜினி சிக்கிக் கொள்ளாமல் தனக்குப் பிரச்சினை வரக்கூடாது என ஒதுங்கிவிட்டார். கொரோனா மட்டும் அவர் முடிவுக்குக் காரணமல்ல” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரைமுருகன், திமுக

“நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும் தொடங்காததும் உடல் நிலை, மனநிலை, சூழ்நிலையைப் பொறுத்தது. அதில் நுழைந்து நாங்கள் எந்த கருத்துகளையும் சொல்ல விரும்பவில்லை.  ரஜினிகாந்த் குறித்து பேசுவது முடிந்து போன ஒன்று” என்று, கூறியுள்ளார்.

பொன்முடி, திமுக

“உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ரஜினி அரசியலை விட்டு விலகியிருப்பது நல்லதுதான்” என்று, குறிப்பிட்டுள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி

“ரஜினிகாந்தின் இந்த முடிவு தவிர்க்க முடியாதது. ஆனால் அவர் கூறியதன் இறுதி பாராவைப் கவனித்தீர்களேயானால் ஒன்று புரியும். அவர் தமிழக மக்களுக்கு அரசியலில் நேரடியாக இல்லாமலேயே சேவை செய்வார். எனது கணிப்புப் படி, 1996 போல அவர் தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று, கூறியுள்ளார். 

அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி

“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னது அவர் உடல் நிலை கருதி கூறியுள்ளார். இதை 
அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வரும் தேர்தலில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிடும், ரஜினிகாந்த் ஆசியுடன் இந்து மக்கள் கட்சி மக்களிடம் ஆன்மீக அரசியலை எடுத்துச் செல்லும்” என்றும், கூறியுள்ளார். 

கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்

“ரஜினிகாந்தின் 3 பக்க அறிக்கையில் இருப்பது வெறும் சாக்கு மட்டும் தான்” என்று, மிக கடுமையாக சாடி உள்ளார். 

பா.ஏகலைவன், பத்திரிகையாளர் 

“ரஜினி மீது அவரது ரசிகர்களுக்கே நம்பிக்கை இல்லை” என்று, குறிப்பிட்டுள்ளார். 
 
சத்ய நாராயணா, ரஜினியின் சகோதரர் 

“ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது இப்போதுதான் எனக்கே தெரியும்” என்று, தெரிவித்துள்ளார்.