பேஸ்புக் காதலனை பார்க்கச் சென்ற பள்ளி மாணவி 3 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமியை மீட்டுச் சென்ற காதலனும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே நேரத்தில், அந்த 13 வயது மாணவி, அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடந்து உள்ளார். அப்போது, ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்த 22 வயதான தரணி என்ற இளைஞர், அந்த மாணவிக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் ஃபேஸ்புக் மூலமாகவே தொடர்ந்து சாட்டிங் செய்து வந்தனர். 

இந்த பழக்கமே, நாளடைவில் அவர்கள் 2 பேருக்கும் இடையே காதல் மலர காரணமாக அமைந்து போனது. அவர்களுக்குள் காதல் மலர்ந்த நிலையில், அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தினமும் அவர்கள் இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேச தங்களது காதலை மேலும் மேலும் வளர்த்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவு செய்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அப்போது, அந்த மாணவி, வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கோழிக்கோடு மாவட்டம் மணாசேரியை சேர்ந்த 22 வயதான விபின் ராஜ் என்ற இளைஞர் அந்த மாணவிக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இதனால், அவரக்ள் இருவரும் நட்பு ரீதியாக தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டனர்.

மேலும், அந்த மாணவி “எனக்கு கிருஷ்ணகிரியில் ஒரு காதலன் இருக்கிறார். அவரை நேரில் சந்திக்க முடிவு செய்து இருக்கிறேன். அதனால், என் காதலனைச் சந்திக்க நீ எனக்கு உதவி செய்வாயா?” என்று, விபின்ராஜிடம் உதவி கேட்டுள்ளார்

அந்த மாணவியிடம் விபின்ராஜிம் உதவி செய்வதாக கூறவே, புதிய நண்பரை நம்பி அந்த மாணவி கடந்த 2 ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு வருவதாகக் காதலனிடம் கூறி உள்ளார். அதன்படி விபின்ராஜ் அவரது நண்பரான 23 வயதான அஜித் ராஜ், 23 வயதான ஜோபியன்  ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு காரில், அந்த மாணவியை அழைத்துச் சென்று உள்ளனர்.

அந்த கார் கொஞ்ச தூரம் சென்ற நிலையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அந்த காரை அவர்கள் நிறுத்தி உள்ளனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து, அந்த மாணவியை அந்த 3 பேருமாக சேர்ந்து, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, ஓசூர் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கி விட்டு விட்டு, அவர்கள் 3 பேரும் தப்பிச் சென்று உள்ளனர். அங்கு, அனாதையாக நின்ற அந்த மாணவி, தனது காதலன் தரணிக்கு போன் செய்து தகவல் தெரிவித்து உள்ளார். உடனே அங்கு வந்த காதலன், “நான் உனக்கு வாழ்க்கை தருகிறேன்” என்று கூறிவிட்டு வந்து மாணவியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு வைத்து. அந்த மாணவியை அவனும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்நிலையில், தங்கள் மகளை காணவில்லை என்று தேடிய அவரது பெற்றோர், அங்குள்ள முக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்த மாணவியின் செல்போன் டவர் அடிப்படையில் போலீசார் விசாரித்து உள்ளனர்.  அப்போது, அந்த செல்போன் சிக்னல் கிருஷ்ணகிரியில் இருப்பதாக காட்டி உள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியைப் பத்திரமாக மீட்டனர்.

அத்துடன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, அவரது காதலன் தரணியையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மாணவி அளித்த தகவலின் பேரில், அந்த மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்த அந்த 3 பேர் கொண்ட கும்பலையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.