“எனது காதல் கணவரின் குடும்பத்தை போலீசை வைத்து என் பெற்றோர் மிரட்டுகிறார்கள்” என்று, வீட்டிலிருந்து மாயமான இளம் பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்து உள்ள நெய்யூர் பகுதியைச் சேர்ந்த செல்வின் என்பவரது மகள் 19 வயதான சஜி என்ற இளம் பெண்,  நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

தற்போது தமிழக உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அனைவரும் வீட்டில் இருந்து வருகின்றனர். அதன்படியே, இளம் பெண் சஜியும் தனது வீட்டிலிருந்தே ஆன் லைன் வகுப்பில் பாடம் படித்து வந்தார்.

அதே நேரத்தில், இளம் பெண் சஜி, பள்ளியில் படிக்கும் போதே தன்னுடன் படித்து வந்த ஷியாங்கோ என்ற இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்தார். பள்ளிப் படிப்பு முடித்து, கல்லூரியில் படிப்பைத் தொடரும் போதும், இவர்களது காதலும் கூடவே வளர்ந்து உள்ளது. இவர்கள் இருவேறு பகுதிகளில் தற்போது படித்து வந்தாலும், செல்போனிலேயே தங்களது காதலை அவர்கள் வளர்த்துக்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இளம் பெண் சஜி, வீட்டிலேயே இருந்து வந்து வந்துள்ளார். அப்போது, அடிக்கடி தனது காதலனுடன் அவர் செல்போனில் பேசிக்கொண்டு வந்துள்ளார். அப்போது, தனது பெற்றோரிடம் அந்த பெண் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.

இதனையடுத்து, “தனது மகளின் காதலன் யார்?” என்று, அவரது பெற்றோர் விசாரித்து உள்ளனர். அதன்படி, சஜியும் தன் காதலன் பற்றி விபரங்களைக் கூறி உள்ளார். அந்த இளைஞர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். அத்துடன், அந்த பெண்ணின் செல்போனையும் பறித்துக்கொண்டனர். இதனால், தன் காதலனிடம் அந்த பெண் பேச முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன் காதலனை எப்படியோ தொடர்பு கொண்டு நடந்த விசயங்களை எல்லாம் கூறி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் மிட்டுள்ளனர். 

அதன்படி, அந்த இளம் பெண் கடந்த 3 ஆம் தேதி வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். இது குறித்து சஜியின் தந்தை செல்வின் இரணியல் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இளம் பெண் சஜியை தேடி வந்தனர். 

விசாரணையில், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஷியாங்கோ என்ற இளைஞருடன், இளம் பெண் சஜி சென்று திருமணம் செய்துகொண்டதும் தெரிய வந்தது. இதன் காரணமாக, போலீசார், காதலனின் குடும்பத்தினரைப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. 

இந்நிலையில், வீட்டில் இருந்து மாயமான கல்லூரி மாணவி சஜி, வாஸ்ட்ஆப்பில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “காதலன் ஷியாங்கோவிற்கு நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மின்னஞ்சல் செய்தேன். இதனால், அவர் என்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். ஆனால், என் கணவர் குடும்பத்தாரைக் காவல் துறையினர் பிடித்து வைத்து, நானும் எனது கணவர் ஷியாங்கோவும் சரணடைந்தால் தான் அவர்களை விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், “இது தொடர்ந்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளவதை தவிர வேறு வழியில்லை என்றும், இதற்கு முழு பொறுப்பும் எனது குடும்பத்தினர் தான்" என்றும், அந்த இளம் பெண் பேசி உள்ளார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.