இளம் பெண்யை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், சம்மந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 

குற்றங்களுக்குப் பெயர் போன உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அத்துடன், அவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, அந்த 16 வயதான சிறுமி, எப்போதும் போல் காலையில் பள்ளிக்கு சென்று உள்ளார். ஆனால், மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்ப வேண்டிய அந்த மாணவி, வீடு திரும்பவே இல்லை. இதனால், பதறிப்போன மாணவியின் பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தங்களது மகளைத் தேடிப் பார்த்தனர். ஆனால், எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், பயந்துபோன மாணவியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான மாணவியை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதனையடுத்து, பள்ளிக்குச் சென்று மாயமான 16 வயது மாணவி, கொலை செய்யப்பட்ட நிலையில் மறு நாள் காலையில் அவரது உடல் அங்குள்ள தாத்ரியின் கால்வாயில் கண்டு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலமாக கிடந்த மாணவியின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜி.முனிராஜ், நேரடியாகக் களத்தில் இறங்கி விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணையில், தாத்ரி செல்லும் வழியிலிருந்த சுங்கச்சாவடி சிசிடிவியில் அப்பாஸி பாய்ஸ் என்று வித்தியாசமாக எழுதப்பட்ட ஒரு பைக் கடந்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

இதனையடுத்து, அந்த வாகனத்தின் உரிமையாளர் 20 வயதான ஜுல்பிகர் அப்பாஸியை போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில், அவனது சக கூட்டாளிகளான 21 வயதான தில்ஷாத் அப்பாஸி, 22 வயதான இஸ்ரேல் ஆகிய கூட்டாளிகளுடன் சேர்ந்து இப்படியான ஒரு கொடூர பாவத்தை அவர்கள் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் மது போதையில் இருந்த போது சைக்கிளில் சென்ற அந்த மாணவியை கடத்தி சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இப்படியாக, கடந்த 3 ஆண்டுகளாக புலந்த்சாகரின் போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், “3 பேர் மீதான குற்றங்கள் உறுதி” செய்யப்பட்டன. இதனையடுத்து, “3 பேருக்கும் தூக்கு தண்டனை” வழங்கி, நீதிபதி ராஜேஷ் பராஷார் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.