புதிதாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்னவுக்கு ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு ஆகிய 2 இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிதாக நேற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், 43 புதிய அமைச்சர்கள் நேற்றைய தினம்
பதவி ஏற்றுக்கொண்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த், பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதில், 

- பிரதமர் நரேந்திர மோடி வசம் பணியாளர், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சம், அணுசக்தி, வான்வெளி போன்ற துறைகள் இருக்கின்றன. 

- ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சராக தொடர்கிறார். 

- உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

- தின் கட்கரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக தொடர்கிறார்.

- நிர்மலா சீதாராமன், மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சராக இருக்கிறார்.

- நரேந்திர சிங் தோமர், வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

- ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராக தற்போதும் தொடர்கிறார்.

- அர்ஜூன் முண்டா, பழங்குடியின நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

- நேற்றைய தினம் புதிதாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்னவுக்கு, ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம் &
தொலைத்தொடர்பு ஆகிய 2 துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

- குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்
ஒதுக்கப்பட்டு உள்ளது.

- சுகாதாரம் மற்றும் ரசாயணம் உர அமைச்சகம் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் அமைச்சராக மன்சுக் மாண்ட்வியா நியமிக்கப்பட்டு உள்ளார்.

- புர்சோத்தம் ரூபாலாவுக்கு மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டு உள்ளார்.

- மத்திய கல்வித் துறை மற்றும் திறன் வளர்ப்பு ஆகிய துறைகளை தர்மேந்திர பிரதான் வசம் வந்துள்ளது.

- மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் அமைச்சராக நாராயண் ரானே நியமிக்கப்பட்டு உள்ளார். 

- கிரன் ரிஜ்ஜூ சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

- மத்திய வீட்டு வசதி மற்றும் நகர் புறம், மத்திய பெட்ரோலியத் துறை ஆகிய 2 அமைச்சகம் ஹர்திப் சிங் பூரிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

- பியூஷ் கோயல் வர்த்தகத் துறை உடன்,  நுகர்வோர் மற்றும் உணவு நலன் மற்றும் ஜவுளித் துறையை கவனிக்கிறார்.

- மீனாட்சி லேக்கிக்கு, வெளிவிவகார மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

- தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய 2 துறையின் அமைச்சராக அனுராக் தாக்கூர் நியமிக்கப்பட்டு
இருக்கிறார். 

- கிரிராஜ் ராஜ் சிங் கிராம அபிவிருத்தி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

- பசுபதி பராஸுக்கு உணவு பதப்படுத்தும் அமைச்சகம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

- பூபேந்திர யாதவ் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு
உள்ளது.

- மிக முக்கியமாக, தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு, மீன்வளத் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டு
உள்ளது.