உத்தரப் பிரதேச எல்லை அருகே போபாலில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் கிஷான்பூர் என்ற கிராமம். அங்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் வேலை செய்வதற்காக தேவராஜ் அனுராகி என்ற 25 வயது ,  தலித் இளைஞர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். விருந்து முடிந்த பிறகு  சுத்தம் செய்வதற்காக தேவராஜ் அனுராகி உணவு செய்யப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவை தேவராஜ் அனுராகி சாப்பிட்டதை கண்டவுடன் பூரா சோனி, சந்தோஷ் பால் என்ற இருவரும் தடியை எடுத்து தேவராஜை கடுமையாக தாக்கி கொலை செய்து இருக்கிறார்கள்.


விருந்து முடிந்த பிறகு மீதம் இருந்த உணவை சாப்பிட எடுத்ததற்காக தேவராஜ் அனுராகி அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதுப்பற்றி  கவுரிகார் காவல் நிலைய அதிகாரி ஜஸ்வந்த் சிங் ராஜ்புத் தெரிவித்தது, ‘’ விருந்தில் வைக்கப்பட்டிருந்த உணவை தேவராஜ் அனுராகி சாப்பிட்டதை கண்டவுடன் பூரா சோனி, சந்தோஷ் பால் என்ற இருவரும் தடியை எடுத்து தேவராஜை கடுமையாக தாக்கியதில் அவர் இறந்து இருக்கிறார் ” என்று கூறியிருக்கிறார். 


இதையடுத்து பூரா சோனி, சந்தோஷ் பால் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இருவருமே தற்போது தலைமறைவாக இருப்பதாக எஸ்.பி சச்சிச் சர்மா தெரிவித்துள்ளார்.


தலித் என்ற ஒரே காரணத்துக்காக அடித்து கொலை செய்யும் அளவிற்கு துணிச்சல் வருகிறது என்றால் சாதிய வன்மமும் , ஆதிக்க எண்ணமும் இந்திய சமூகத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை தெளிவாக உணர முடியும். தொடர்ச்சியாக இதுப்போன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் குறிப்பிட சில சதவீத மக்களின் எதிர்ப்பு குரலை தவிர மற்ற எல்லோரும், இப்ப எல்லாம் யாரு சார் சாதி பார்க்குறாங்க? என பேசிக்கொண்டே இதுப்போன்ற சம்பவங்களை இயல்பாக கடந்து போகிறோம். #Dalitlivesmatter