தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு, பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மீண்டும் தனது 2 வது வெற்றியைப் பதிவு செய்தது. 

அதன் பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நல்லத் தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மிகவும் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணி படு தோல்வி அடைந்தது. 

முக்கியமாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் இந்தப் போட்டியில் இது வரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். 

இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செயல்படும் சில கிரக்கெட் வெறியர்கள், சென்னை அணியின் தோல்வியை தாங்க முடியாமலும், தோனியின் மோசான ஆட்டத்தைப் பார்க்கச் சகிக்க முடியாமலும் கேப்டன் தோனி, அவர் மனைவி சாக்ஷி ஆகியோர் குறித்து மோசான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இதன் உச்சக்கட்டமாக, “தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ள ஒருவர் “சரியாக விளையாடவில்லை என்றால் தோனியின் 5 வயது மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம்” என்று, மிகவும் அருவருக்கத்தக்க வகையில் மோசமான பதிவு ஒன்றை அவர் பதிவிட்டு இருந்தார். இதனால், பலரும் முகம் சுளித்தனர். இந்த கருத்துக்கள் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த விசயம் அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த மோசமான பதிவு தொடர்பாக ராஞ்சி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வந்தனர். 

தோனியின் 5 வயது மைனர் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குஜராத்தின் முந்த்ராவில் இருந்து 16 வயது சிறுவன் தான், இப்படி ஒரு மோசமான பதிவைப் பதிவு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவனை போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த 16 வயது சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “அந்த சிறுவன் அங்குள்ள நம்னா கபயா கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்” என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு, அந்த 16 வயது சிறுவன், ராஞ்சி போலீசில் 
ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கு உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனால், குஜராத் மாநில கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.