காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவித்து உள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பதிவிட்டு வந்தார். அதே போல், மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி அமித்ஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்து இருந்தார். 

மேலும், அதிமுக முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், நடிகை குஷ்பு தனது வாழ்த்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதன் பிறகு, “பிரதமர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தவறும் இல்லை” என்றும், அவர் விளக்கம் அளித்திருந்தார். 

அதன் தொடர்ச்சியாகத் தான், கடந்த சில நாட்களாக நடிகை குஷ்பு, பாரதீய ஜனதா கட்சியில் இணையப் போவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டு இருந்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகை குஷ்பு, நேற்று இரவு 9.30 மணி அளவில், திடீரென அவசரம் அவசரமாக டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மீண்டும் வந்தார்.

அப்போது, நடிகை குஷ்புவிடம் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு, “நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல் வருகிறதே? அது, உண்மையா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கருத்து சொல்ல விரும்பவில்லை” என்ற பதிலை மட்டும் கூறிவிட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டார். 

அதன் தொடர்ச்சியாக, அவரை விடாது பின் தொடர்ந்து செல்ற செய்தியாளர்கள், “நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா?” என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். ஆனால், இப்படியான எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக, “நான் எந்த கேள்விக்கும் பதில் சொல்லப் போவதில்லை” என்று கூறி விட்டு, அங்கிருந்து விடுபட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவருடைய கணவரும், சினிமா இயக்குனருமான சுந்தர்.சி.யும் உடன் சென்றார்.

முக்கியமாக, நடிகை குஷ்பு, இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதற்காக டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று அவர் சந்திக்கிறார் என்றும் தகவல் நேற்று இரவே வெளியானது. இப்படியான நிலையில் தான், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு தற்போது அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகச் சோனியா காந்திக்கு” நடிகை குஷ்பூ கடிதம் எழுதி உள்ளார்.

நடிகை குஷ்பூவின் விலகல் கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக” குஷ்பூ அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். 

மேலும், அந்த கடிதத்தில் தனக்கு செய்தித் தொடர்பாளர் பதவியையும், முன்னிலை உறுப்பினராகவும் இருந்து பணியாற்ற வாய்ப்பு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி” என்றும், குஷ்பூ தெரிவித்து உள்ளார். அத்துடன், “காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்ற வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்து” காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

அதே நேரத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, “பார்வைகள், புரிதல்கள், விருப்பு, வெறுப்புகள், காலத்திற்கேற்ப மாறும் என்றும், கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர்” என்றும், குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார். 

முக்கியமாக, “மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலர் என்னைப் போன்றவர்களை அடக்கி, ஒடுக்கினர்” என்றும், குஷ்பு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

“பணம், புகழைப் பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை என்றும், மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது” என்றும், குஷ்பு விளக்கம் அளித்து உள்ளார்.

இதனிடையே, “ கணவர் சுந்தர்.சி கொடுத்த அழுத்தத்தாலேயே, நடிகை குஷ்பு பாஜகவில் இணையும் முடிவை எடுத்துள்ளார்” என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபண்ணா தெரிவித்துள்ளார்.